Home Featured நாடு புதிதாக மேலும் 2 தமிழ்ப் பள்ளிகள் – சுப்ரா அறிவிப்பு!

புதிதாக மேலும் 2 தமிழ்ப் பள்ளிகள் – சுப்ரா அறிவிப்பு!

631
0
SHARE
Ad

subra-press conf-6 march 2017கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் தலைநகரில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இரண்டு புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கான கட்டுமானங்கள் தொடங்கவிருப்பதை அறிவித்தார்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும், மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங்கும் கலந்து கொண்டனர்.

தைப்பிங் காயா தமிழ்ப் பள்ளி, சுங்கைப்பட்டாணி தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளி ஆகியவையே புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் இரண்டு தமிழ்ப் பள்ளிகளாகும்.

#TamilSchoolmychoice

இந்த இரண்டு பள்ளிகளின் கட்டுமானங்கள் முழுமையடைவதற்கு ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் சுப்ரா தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகள் தொடர்பில் தனிப்பட்ட அக்கறை எடுத்து செயல்பட்டு வரும் நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  13-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக, விடுத்த அறிவிப்பில் புதிதாக 6 தமிழ்ப் பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என்ற இனிய செய்தியை இந்திய சமுதாயத்திற்கு வழங்கினார்.

அந்த காலகட்டத்தில் 523 தமிழ்ப் பள்ளிகள் நாட்டில் இயங்கி வந்தன. 524-வது பள்ளியாக கூலிம் பாயா பெசாரில் புதிய தமிழ்ப் பள்ளி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதிதாகக் கட்டப்படும் என பிரதமரால் அறிவிக்கப்பட்ட 6 புதிய தமிழ்ப் பள்ளிகள் பின்வருமாறு:

  1. தாமான் கிளாடி (சுங்கைப்பட்டாணி, கெடா)
  2. ஹீவுட் (சுங்கை சிப்புட், பேராக்)
  3. தாமான் செந்தோசா (கிள்ளான், சிலாங்கூர்)
  4. தாமான் பிஜேஎஸ் 1 (பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்)
  5. பண்டார் மக்கோத்தா (செராஸ், சிலாங்கூர்)
  6. பண்டார் பாரு அலாம் (மாசாய், ஜோகூர்)

புதிய இரண்டு பள்ளிகளுக்கான அனுமதியை வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் வழங்கியுள்ள கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்சிர் காலிட்டுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் திட்டங்களின் வெற்றிக்குப் பாடுபட்ட துணைக் கல்வி அமைச்சர் ப.கமலநாதனுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

தைப்பிங் தாமான் காயாவில் இடம் மாற்றப்பட்ட தமிழ்ப் பள்ளி

தைப்பிங் ஹோலிரூட் தோட்ட தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், அந்தப் பள்ளியை, தைப்பிங்கில் அதிகமான இந்தியர்கள் வாழும் தாமான் காயா பகுதியில் நிறுவுவதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் வழங்கி இதற்காக 78 இலட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

இந்தப் பள்ளி இனி தாமான் காயா தமிழ்ப் பள்ளி என பெயர் மாற்றத்தோடு இயங்கும்.

இந்தப் புதிய பள்ளியில் 6 வகுப்புகளும், மற்ற வசதிகளும் நிர்மாணிக்கப்படும்.

தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளி, கெடா

528-வது தமிழ்ப் பள்ளியாக புதிதாகக் கட்டப்படுவது கெடாவில் சுங்கைப்பட்டாணி நகரில் கட்டப்படவிருக்கும் தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளியாகும்.

18 வகுப்பறைகளோடு கட்டப்படவிருக்கும் இந்தப் பள்ளிக்காக 18 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கணினி மையம், விஞ்ஞானக் கூடம், நூலகம், பாடப் புத்தக அறை, வாழ்க்கைக் கல்வி தொழிற் பயிற்சிக் கூடம், போன்ற வசதிகளும் இந்தப் பள்ளியில் நிர்மாணிக்கப்படும்.