கோலாலம்பூர் – இரு நாட்டுத் தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தவதைத் தடுக்க உடனடியாகத் தடுத்து வைத்திருக்கும் மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் வடகொரியாவின் முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அனைத்துலக சட்டம் மற்றும் தூதரக நடைமுறைகளை முற்றிலும் மீறி, எங்களது நாட்டவர்களை பிணை பிடித்து வைத்திருப்பது மிகவும் கொடூரமான செயல்.
- அமைதி விரும்பும் நாடு என்ற முறையில், மலேசியா அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. எனினும், குடிமகன்களைக் காப்பதே எங்களது முதல் கடமை, அதற்கு அச்சுறுத்தல் வந்தால், தக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம்.
- தேசிய பாதுகாப்புக் கவுன்சிலை அவசரக் கூட்டத்திற்கு அழைத்திருக்கிறேன். வடகொரியாவில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வரை, மலேசியாவில் உள்ள அனைத்து வடகொரிய நாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கும் படி தேசிய காவல்படைத் தலைவரிடமும் உத்தரவிட்டிருக்கிறேன்.
- உடனடியாகத் தீர்வு கிடைக்குமென்று நம்புகிறோம். எனவே பிரச்சினைகள் இன்னும் தீவிரமாகாமல் தடுக்க, எங்களது குடிமகன்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் படி வடகொரிய தலைமைத்துவத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நஜிப் தெரிவித்திருக்கிறார்.