கோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மின் உறவினர்கள் வந்து மரபணு மாதிரியைக் கொடுக்க வேண்டும் என்று மலேசிய அதிகாரிகள் காத்திருக்கும் நிலையில், கிம் ஜோங் நம்மின் மகன் கிம் ஹான் சோல் பேசுவதாகக் காணொளி ஒன்று யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது.
40 வினாடிகள் ஓடக் கூடிய அக்காணொளி கியோலிமா சிவில் டிபன்ஸ் என்ற குழுவினரின் யூடியூப் பக்கத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை வெளியானது.
அதில் பேசும் இளைஞர், “என் பெயர் கிம் ஹான் சோல், நான் வடகொரியாவைச் சேர்ந்தவன். கிம் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். தற்போது நான் எனது தாயார் மற்றும் சகோதரியுடன் இருக்கிறேன். நாங்கள் …………… மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறோம்” என்று கூறுகிறார்.
ஆனால், அந்த இளைஞர் நன்றி சொல்ல விரும்புவதாகக் கூறும் இடத்தில் அவரது குரல்பதிவு அழிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அந்தக் காணொளியில் தான் கிம் ஹான் சோல் என்பதற்கு ஆதாரமாக தனது கடப்பிதழைக் காட்டுகிறார். அதுவும் கருப்பு நிற திரையால் மறைக்கப்பட்டிருக்கிறது.
இறுதியாக, அவர், “எல்லாம் விரைவில் நல்லபடியாகும் என்று நம்புகிறோம்” என்று கூறுகிறார்.
அந்தக் காணொளியில் இருப்பவர் ஹான் சோல் தான் என்பதற்கு ஆதாரமாக இதற்கு முன், அல் ஜசீரா உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு ஹான் சோல் அளித்திருக்கும் பேட்டியில் உள்ள உருவத்துடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.