கோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் 11 மலேசியர்களும் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் தக்க பாதுகாப்போடு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
அவர்கள் வழக்கம் போல் தங்களது தினசரிப் பணிகளைச் செய்து வருகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், வடகொரியாவில் இருந்து வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலேசியர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
எனினும், மலேசியா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் முறையான வழியில் தகவல் பரிமாற்றம் இல்லை என்றால், மலேசியா, வடகொரியாவுடன் தொடர்பில் இருக்காது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
“தற்போது வரை (இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு) அப்படியே தான் இருக்கிறது. காரணம் கலந்தாலோசிப்பதற்கு முறையான வழி இருக்கிறது. காரணம், அவர்களுடன் பேசி கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் முறையான வழி அவசியம்”
“இதனிடையே, வடகொரிய அரசாங்கத்திற்கு என்ன தேவை? என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அது தான் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்”
“ஆனால், தற்காலிகமாக மலேசியாவில் இருக்கும் வடகொரிய நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கும் முடிவில் நாம் உறுதியாக இருக்கிறோம்” என்று நஜிப் தெரிவித்தார்.