பியோங்யங் – வெளிநாடுகளில் வசிக்கும் வடகொரியர்கள் இனி இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், கிம் ஜோங் நம் மரணம் பற்றிய தகவல் எதையும் பகிரக் கூடாது என்றும் வடகொரிய அரசு புதிய தடை உத்தரவைப் பிறபித்திருப்பதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா செய்தி வெளியிட்டிருக்கிறது.
வடகொரியாவில் இணையத்தைப் பயன்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் வடகொரிய நாட்டவர்கள் அதைப் பற்றிய கவலையின்றி இத்தனை நாட்கள் சுதந்திரமாக இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் பணியில் இருக்கும் வடகொரிய நாட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு, வடகொரியா உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் ரேடியோ ஃபிரீ ஆசியா கூறுகின்றது.
“வெளிநாட்டில் இருக்கும் வடகொரிய நாட்டவர்கள் கடும் தண்டனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், தங்கள் நாடு விதித்திருக்கும் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் மற்றும் வடகொரிய தூதரகங்களில் பணியாற்றுபவர்கள் இணையத்தை முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என பியோங்யங் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவையடுத்து வடகொரிய நாட்டவர்களின் திறன்பேசிகள் அவ்வப்போது கண்காணிக்கப்படும்” என்றும் ரேடியோ ஃப்ரீ ஆசியா கூறுகின்றது.