Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘மாநகரம்’ – 1 நிமிடம் கூட இருக்கையை விட்டு நகர முடியாது! அவசியம் பார்க்க...

திரைவிமர்சனம்: ‘மாநகரம்’ – 1 நிமிடம் கூட இருக்கையை விட்டு நகர முடியாது! அவசியம் பார்க்க வேண்டிய படம்!

909
0
SHARE
Ad

Maanagaramகோலாலம்பூர் – படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை இருக்கையை விட்டு எங்கும் நகராமல், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? என்று நெஞ்சம் படபடக்க ஒரு திரைப்படம் பார்க்க ஆசையா? ‘மாநகரம்’ போய் பாருங்கள்.

அன்றாட வாழ்வில் நாம் தினம் பார்க்கும், கேட்கும் சம்பவங்களை ஒரு தொகுப்பாக எடுத்து, அதை நான்கு கோணங்களில் இருந்து நகர்த்திக் கொண்டு வந்து, இறுதியில் ஒரு மையப்புள்ளியில் கொண்டு வந்து அவற்றை நிறுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குநர் லோகேஸ் கனகராஜ்.

இப்படி ஒரு திரைக்கதையை அமைக்க அவர் எந்த அளவிற்கு கடும் உழைப்பைக் கொடுத்திருப்பார் என்பதற்கு படத்தில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான காட்சிகளே சாட்சி. விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் சிறு சிறு நுணுக்கமான விசயங்களையும் ஆராய்ந்து அதை மிகச் சரியாக காட்சிகளோடு பொருத்தியிருக்கிறார் லோகேஸ் கனகராஜ்.

#TamilSchoolmychoice

கதை

திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளைஞரான ஸ்ரீ, ரெஜினா வேலை செய்யும் பிபிஓ நிறுவனத்தில் வேலைக்குச் சேருகிறார். அங்கு ஏற்கனவே, முரட்டுத்தனமான இளைஞரான சந்தீப், ரெஜினாவை ஒருதலையாகக் காதலித்தபடி அவர் பின்னாலேயே சுற்றித் திரிகிறார்.

Maanagaram1சந்தீப்புக்கும், ரௌடி கும்பல் ஒன்றிற்கும் இடையில் நடக்கும் தகராறில், பழிக்குப் பழி வாங்க நினைக்கும் அக்கும்பல், தவறுதலாக ஸ்ரீயை அடித்து, அவரது போன், சான்றிதழ்களையெல்லாம் திருடிச் சென்று விடுகின்றது.

சான்றிதழ் இல்லாமல் சுற்றித் திரியும் ஸ்ரீ, ஆசிட் வீச்சு வழக்கில் சிக்கிக் கொள்கிறார். அதோடு தனது அப்பாவித்தனத்தால், மேலும் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்.

இப்படியாக தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கும் ஸ்ரீ, இறுதியாக தப்பித்தாரா? பிழைப்பிற்காகச் சென்னை மாநகரத்திற்கு வரும் அவருக்கு என்ன கதி நேர்கிறது? என்பது இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ரசிக்க

ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, முனீஸ்காந்த், மதுசூதனன் மற்றும் இன்னும் சில புதுமுகங்கள், அனைவருமே மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். யாரையும் தனி நடிகராகப் பார்க்க முடியவில்லை. அந்தக் கதாப்பாத்திரமாகவே தான் பார்க்கிறோம்.

இத்தனைக்கும் படத்தில் யாருக்குமே கதாப்பாத்திரத்தின் பெயர் சொல்லவே இல்லை. பிகேபி என்ற பெயரைத் தவிர மற்றவர்களின் பெயர் உங்களுக்கு கேட்டதாக ஞாபகமே இருக்காது. அந்த அளவிற்கு பெயரே இல்லாமல் மனதில் பதியும் கதாப்பாத்திரம். படத்தின் கிளைமாக்சில் கூட, கதாப்பாத்திரங்கள் ஒருவரையொருவர் பெயரைக் கேட்டுக் கொள்வதோடு படம் முடிகிறது.

அதே போல் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம், ஹாலிவுட் தரத்திற்கு மிக நுணுக்கமாக இருக்கின்றது. ஒரு இடத்தில் கூட, லாஜிக் மீறாமல் மிகக் கவனமாக சொல்லப்பட்டிருக்கிறது.

Maanagaram3உதாரணமாக, ஸ்ரீ பாக்கெட்டில் இருந்து செல்போன் நழுவி விழுகிறது. ஒரு வினாடி தான் அந்தக் காட்சி வந்து போகிறது. ஆனால் அந்த செல்போன் விழுவதால் ஏற்படும் விளைவு இன்னொரு பக்கம் படுபயங்கரமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இப்படியாகப் பல நுணுக்கமான காட்சிகள் காரணத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்த பிலோமினி மிகப் பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல், படத்தின் வசனங்களிலும் எதார்த்தம் நிரம்பி வழிகின்றது. கிராமங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞர்கள் என்ன பேசுவார்களோ அதையே தான் வசனமாக வைத்திருக்கிறார்கள்.

“அண்ணே.. ஊர்ல ஒருத்தன் (ம………….) திட்டுனாலே, சண்டைக்குப் போயிருக்கேன். ஆனா இங்க வார்த்தைக்கு வார்த்த அம்மாவப் பத்தி திட்டுறான் இதையெல்லாம் கேட்டுக் கேட்டு பழகிக்கணுமாண்ணே?”

“தம்பி வெளியூர்ல இருந்து இங்க வந்து பணக்காரன் ஆனவன் தான் இந்த ஊரப் பத்தி திட்டுறான். ஆனா திட்டிட்டே இருப்பானே தவிர அவன் இந்த ஊரைவிட்டு போகவே மாட்டான்” – இப்படியாக நிஜத்தைப் போட்டு உடைக்கும் வசனங்கள் இருக்கின்றன.

முனீஸ்காந்த்தின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும் படியாக காமெடி கலந்து வித்தியாசமாக இருக்கின்றது. அதுவும் அந்தக் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் பதற்றத்தில் நகங்களைக் கடிக்க வைத்துவிடுகிறார்.

Maanagaram2செல்வக்குமார் எஸ்கே ஒளிப்பதிவில் சென்னை மாநகரம் அவ்வளவு எதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கிறது. சினிமா மூலமாக இல்லாமல் நிஜமாக நம் கண்களால் சென்னையைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அப்படி இருக்கிறது. சென்னைக் கட்டிடங்கள், இரவு நேரச் சாலைகள், குறுக்குச் சந்துகள் என நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வகையில் கேமரா கோணங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஜேவிட் ரியாஸ் இசையில் கதையோடு சேர்ந்த ஐந்து சின்னச் சின்ன பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. மனதில் பதியவில்லை என்றாலும் கதையோட்டத்திற்கு அவை நன்றாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் படத்தின் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜேவிட்.

மொத்தத்தில், இது போன்ற திரைப்படங்கள் எப்போதாவது தான் வரும். வித்தியாசமான சினிமா விரும்பிகள் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சிறந்த திரைப்படம். நிச்சயமாக மசாலா பட விரும்பிகளுக்கான படம் கிடையாது!

-ஃபீனிக்ஸ்தாசன்