சென்னை – ராகவா லாரன்ஸ் நடிப்பில், புதுமுக இயக்குநர் சாய்ரமணி இயக்கத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற திரைப்படம் நேற்று வியாழக்கிழமை வெளியானது.
காவல்துறையைக் கதைக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில், காவல்துறை அதிகாரியாக வரும் லாரன்ஸ், ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்கக் கூடாதோ? அப்படி ஒரு உதாரணமாக நடித்திருக்கிறார்.
போலீஸ் பாதுகாப்போடு, திருடர்களை ஏடிஎம் மையங்களில் ஏவி கொள்ளையடிக்கச் சொல்வது, சகட்டு மேனிக்கு துப்பாக்கியை உபயோகித்திருப்பது, காவல்துறை உடையிலேயே கதாநாயகியைக் கண்ட இடங்களில் தொடுவது போன்ற காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய வசனங்கள் மக்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.
காட்சி 1:
தந்தையும், மகளையும் கும்பல் ஒன்று கடத்தி வைக்கிறது. மகளைச் சுற்றி வில்லன்கள் கும்பலாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அப்பெண் சொல்கிறார், “அப்பா.. இவனுக மூஞ்சியப் பார்க்கவே முடியல.. டேய் என்னை ரேப் பண்ணியாவது கொல்லுங்கடா”
காட்சி 2:
கதாநாயகி நிக்கியின் அக்காவாக நடித்திருக்கும் தொலைக்காட்சி நடிகை தேவதர்ஷினிக்கு, லாரன்ஸ் புது நெக்லஸ் ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அந்த நெக்லசைப் பார்த்தவுடன் பல்லை இளித்துக் கொண்டு தேவதர்ஷினி இப்படி பேசுகிறார், “கொளுந்தனாரே.. நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. எங்க பாப்பா தான் இவரு பின்னால சுத்திச்சுன்னு நானே வந்து சாட்சி சொல்றேன்”
காட்சி 3:
செய்தியாளராக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, பேட்டி கொடுக்கச் சொல்லி ஒருவனுக்கு மது வாங்கிக் கொடுக்கிறார். மதுவைக் குடித்தவுடன், அவன் தனது சகாக்களுடன் சேர்ந்து கொண்டு நிக்கியை கும்பலாக ‘கேங் ரேப்’ செய்யப் போவதாக அப்பட்டமாகச் சொல்லிக் கொண்டு துரத்திக் கொண்டு வருகிறான். அதை போலீசான லாரன்ஸ் ரசித்துப் பார்க்கிறார்.
இப்படியாக படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் இதுவரை நடிகர் லாரன்சுக்கு மக்கள் மத்தியில் இருந்த நல்லபெயரைக் கெடுப்பது போலவே அமைந்திருக்கிறது.
அதோடு, “மக்கள் சூப்பர் ஸ்டார்” என்று புதிதாக லாரன்சுக்கு, படத்தில் இயக்குநர் கொடுத்திருக்கும் பட்டமும், லாரன்சுக்கு எதிராக விமர்சனங்கள் எழக் காரணமாக அமைந்திருக்கிறது.
படத்தில் அப்படி ஒரு பட்டம் போடப்பட்டிருப்பதே நேற்று தான் தனக்குத் தெரியும் என்று லாரன்ஸ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-செல்லியல் தொகுப்பு