Home Featured நாடு மலேசியாவில் வழக்கத்திற்கு மாறாக புதன்கிழமை 2 பேருக்கு மரண தண்டனை!

மலேசியாவில் வழக்கத்திற்கு மாறாக புதன்கிழமை 2 பேருக்கு மரண தண்டனை!

822
0
SHARE
Ad

Kajangகோலாலம்பூர் – மலேசியாவில் வழக்கமாக வெள்ளிக்கிழமை தான் மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால் வழக்கத்தை மீறி இன்று புதன்கிழமை சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இது குறித்து அம்னெஸ்டி அனைத்துலக மலேசியா (Amnesty International Malaysia) என்ற அமைப்பின் தலைவர் ஷாமினி தர்ஷினி காளிமுத்து கூறுகையில், “மலேசியா எப்போதும் வெள்ளிக்கிழமை காலை தான் மரண தண்டனைகளை நிறைவேற்றும். ஆனால் முதல் முறையாக புதன்கிழமை இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. புதன்கிழமை காலை தண்டனை நிறைவேற்றுவார்கள் என்பதாக நாங்கள் அறிகிறோம். குறிப்பாக இந்த வழக்கில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக வேக வேகமாக தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

கடந்த 2006-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி, கிருஷ்ணன் ராமன் என்பவரைக் கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட சுதர், ரமேஷ் என்ற சகோதரர்களுக்கு, கடந்த 2010-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, அவர்கள் இருவருக்கும் காஜாங் சிறையில் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அவர்களது வழக்கறிஞர் ஹரீஸ் மகாதேவன், இறந்தவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்துடன் கருணை மனுவைச் சமர்ப்பித்தார்.

அதனால், தண்டனை நிறைவேற்றப்படவிருந்த 12 மணி நேரங்களுக்கு முன்னர் அவர்களது தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை சிறை நிர்வாகம், சுதர், ரமேஷின் குடும்பத்தாருக்கு அனுப்பிய தகவலில், புதன்கிழமை அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், செவ்வாய்க்கிழமை சிறைக்கு வந்து கடைசியாக அவர்களைப் பார்த்துக் கொள்ளும் படியும் தகவல் அனுப்பியிருந்தது.

இன்று புதன்கிழமை திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருந்தால், இன்று அதிகாலையே இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.