சிட்னி – ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில், பெண் ஒருவரின் ஹெட்போன் திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றியதில், அப்பெண்ணின் முகத்திலும், தலையிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்துத்துறை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி, பீஜிங்கிலிருந்து, மெல்பெர்ன் நகருக்குச் சென்ற விமானத்தில், அந்தப் பெண் பயணி பயன்படுத்திய மின்கலத்தால் இயங்கும் பாடல் கேட்கும் கருவி திடீரன பெரும் சத்தத்தோடு வெடித்தது.
அதனையடுத்து, விமானப் பணியாளர்கள் உடனடியாக அவருக்கு உதவியதோடு, எரிந்து கொண்டிருந்த அந்த ஹெட்போன் மீது தண்ணீரை ஊற்றியிருக்கின்றனர்.
மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் கருவிகளை விமானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என விமான நிறுவனங்கள் அண்மைய காலமாக பலக் கட்டுப்பாடுகளை விதித்தும் கூட, இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது விமானப் போக்குவரத்துத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.