கொல்கத்தா – இந்திய உச்ச நீதிமன்றத்துடன் போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் (படம்), இன்று வெள்ளிக்கிழமை தனக்கு எதிராக விடுக்கப்பட்ட கைது ஆணையை ஏற்க மறுத்தார்.
ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் முன் கர்ணன் முன்னிலையாக வேண்டும் என அவர் மீதான கைது ஆணையை அவருக்கு காவல் துறையினர் நேரடியாக வழங்கினர்.
நீதித் துறையின் மீது ஊழல் புகார்களைக் கூறி வரும் கர்ணன், சாதி அடிப்படையில் தன் மீது நீதித் துறையில் உள்ள சிலர் ஆதிக்கம் செலுத்தவும், தன்னை நசுக்கவும் முயற்சி செய்கிறார்கள் எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக அவர் உச்ச நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
எனினும் கைது ஆணையை ஏற்க மறுத்த கர்ணன், ஒரு தலித் இன நீதிபதியை அவமதிக்கும், நடவடிக்கை இது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நோக்கிச் சாடியிருக்கிறார்.
இனியும் தொடர்ந்து, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து தனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்றும் கர்ணன் கூறியிருக்கிறார்.