லக்னோ – உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று சனிக்கிழமை மாலை கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அடுத்த உத்தரப் பிரதேச மாநில முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த எதிர்பாராத தேர்வு காரணமாக, சில சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்திருக்கும் அதே வேளையில், பாஜக ஆதரவாளர்களிடையே ஆதித்யநாத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகப் பிரபலமான பாஜக அரசியல் முகமாகத் திகழும் ஆதித்யநாத் ஒரு சந்நியாசியாவார். நாளை ஞாயிற்றுக்கிழமை இவர் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.
மிகப் பெரிய மாநிலமாக இருப்பதால், இரண்டு துணை முதலமைச்சர்களும் நியமிக்கப்படுகின்றனர். துணை முதல்வர்களாக, பாஜக உ.பி.மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் தினேஷ் சர்மா இருவரும் நியமனம் பெறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து யார் இந்த ஆதித்யநாத் என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அவரைப் பற்றி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் சில தகவல்கள்:
- 1998-இல் முதன் முறையாக கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆதித்யநாத். அப்போது இவருக்கு வயது 26-தான். அந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத்திலேயே மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இவர்.
- அதன் பின்னர் தொடர்ந்து 5 முறை கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சந்நியாசம் பெற்றவுடன் இவர் தனது பெயரை யோகி ஆதித்யநாத் என மாற்றிக் கொண்டார்.
- பி.எஸ்.சி பட்டதாரியான இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும் இதுவரை இவர் மீது அதிகாரபூர்வ குற்றச்சாட்டு எதுவும் இல்லை.
- மிகக் கடுமையான, தீவிரவாதக் கருத்துகளைக் கூறி வருபவர் ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா இயக்கம் வலுவாக வேரூன்றுவதற்கு முன்னணியில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
- சர்ச்சைக்குரிய ராமர் ஆலயத்தை நிர்மாணிக்கப் போராடுபவர் ஆதித்யநாத்.
- இந்தப் பின்னணிகள் காரணமாக, நடுநிலை வாக்காளர்கள், மற்றும் மோடியின் புதிய இந்தியா கொள்கையை ஆதரிப்பவர்கள், ஆதித்யநாத் நியமனத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புக் கருத்துகளைக் கூறத் தொடங்கி விட்டனர்.
- மேலும், துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ள உ.பி. பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியாவும் தீவிர இந்துத்துவா கொள்கைகளை உடையவர் என்பதால், நாடெங்கிலும் இந்தப் புதிய நியமனங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
- இதில் ஒரே ஆறுதல், துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ் சர்மாதான். லக்னோ நகரின் மாநகரசபைத் தலைவரான (மேயர்) இவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியராவார். இவரது தலைமையில்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- நடுநிலையாளராகவும், நவீன பாஜகவின் முகமாகவும் பார்க்கப்படும் தினேஷ் சர்மாதான் தீவிரவாத இந்துக் கருத்துகளைக் கொண்ட முதல்வர் ஆதித்யநாத்துக்கு மாற்றாகப் பார்க்கப்படுகின்றார். தீவிரவாதத் தலைமைத்துவத்தைத் தணிக்கக் கூடிய தலைவராகவும் தினேஷ் சர்மா திகழ்கிறார்.
-இரா.முத்தரசன்