Home Featured நாடு சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு தொடுத்தவர்கள் 2 தரப்புகளாக பிரிகின்றனரா?

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு தொடுத்தவர்கள் 2 தரப்புகளாக பிரிகின்றனரா?

648
0
SHARE
Ad

mic-ros-combo-logo.without title jpgகோலாலம்பூர் – சங்கப் பதிவகமும், மஇகாவும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சில சாதகமான முடிவுகளைப் பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் 8 பேர் கொண்ட குழுவினர், இரு பிரிவுகளாகப் பிரிந்து அந்த வழக்கைச் சந்திக்கக் கூடும் என்ற ஆரூடங்கள் மஇகா வட்டாரங்களில் தற்போது எழுந்திருக்கின்றன.

ஏ.கே.இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோரே சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கு தொடுத்திருக்கும் எண்மராவர்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் மே 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

வழக்கின் பின்னணி

MIC-logoமேற்குறிப்பிடப்பட்ட இந்த வழக்கு, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் கடந்த 11 ஜூலை 2016-இல்  தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென தீர்ப்பு கூறியது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள் தரப்பில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு (பெடரல் கோர்ட்) மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது.

கோர்ட் ஆஃப் அப்பீல் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு உறுதிப்படுத்துவதா அல்லது நிராகரிப்பதா என்ற மேல்முறையீட்டை விசாரிக்க முதலில் கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். அதன் பின்னரே வழக்கின் முழு விசாரணையும் நடைபெறும்.

இந்த வழக்குக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்ற விண்ணப்பத்தை விசாரிக்கத்தான் மே 8-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் கூடுகின்றது.

கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என்றால், மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு, வழக்கின் முழுவிசாரணையும் மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடக்கும்.

கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்தால், பின்னர் அதற்கான முழு மேல்முறையீட்டு விசாரணையையும் கூட்டரசு நீதிமன்றம் நடத்தி தீர்ப்பை வழங்கும். இதற்கு மேலும் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கறிஞர்கள் மாற்றம்

இதற்கிடையில் மேற்குறிப்பிட்ட வழக்கை இதுவரை நடத்தி வந்த வழக்கறிஞர்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வழக்கை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் முன்னின்று நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் எழுந்திருக்கும் புதிய சிக்கல் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட 8 வாதிகளில் மூவர் மட்டுமே புதிய வழக்கறிஞரை நியமித்திருக்கின்றனர் என்றும், மற்ற ஐவர் பழைய வழக்கறிஞரையே நியமித்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

இதனால், வழக்கு தொடுத்திருக்கும் 8 பேர் கொண்ட குழுவினர் இரண்டு பிரிவுகளாகத் தற்போது பிரிந்திருக்கின்றனர்.

3 பேர் கொண்டிருக்கும் ஒரு தரப்பு புதிய வழக்கறிஞரை நியமித்து வழக்கைத் தொடரவிருக்கும் நிலையில், மற்ற ஐவரை அவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால், விடுபட்ட அந்த 5 பேரும், பழைய வழக்கறிஞரை வைத்துத் தங்களின் வழக்கைத் தொடர்வார்களா அல்லது வழக்கிலிருந்தே தங்களை விடுவித்துக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

-இரா.முத்தரசன்