கோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் 9 மலேசியர்களும், விரைவில் மலேசியாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பு தான் வடகொரியாவிற்கு மிக முக்கியம் என்றும், அந்நாட்டு தேசிய சட்டமன்ற சபாநாயகர் சுங் சி கியுன் இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகர் அமின் மூலியாவை, நாடாளுமன்றத்தில் இன்று மரியாதை நிமித்தமாகப் பார்வையிட வந்திருந்த சுங் சி கியுன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மலேசியர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக வருவார்கள் என்பது மிக முக்கியமான விசயம். அது மிக விரைவில் நடைபெறும். இந்த விவகாரத்தில் மலேசியாவும் மிக நியாயமான சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. மலேசியா இதே முறையை எதிர்காலத்திலும் பின்பற்றும் என்றும் நம்புகிறோம். எல்லாம் மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், இரு பெண்களால் விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வடகொரியா, மலேசியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதனால், வடகொரியா, தனது நாட்டில் இருந்த 11 மலேசியர்களை நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைத்தது. அவர்களில் இருவர் மட்டும் அண்மையில் வடகொரிய அரசால் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
இன்னும் 9 மலேசியர்கள் வடகொரியாவின் பிடியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.