கோலாலம்பூர் – மலேசிய மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பெற்ற உன்னதக் கலைஞரான காலஞ்சென்ற பி.ரம்லியின் பிறந்தநாளான இன்று மார்ச் 22-ம் தேதி, புதன்கிழமை, அவரைக் கௌரவிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தனது கூகுள் டூடுலில் பி.ரம்லியின் சித்திரப்படத்தை வரைந்திருக்கிறது.
மலேசியக் கலைத்துறை வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, பல படைப்புகளைக் கொடுத்துச் சென்ற பி.ரம்லிக்கு இன்று 88 வயது ஆகிறது.
நடிகராக, இயக்குநராக, எழுத்தாளராக, இசையமைப்பாளராக பல்துறைகளிலும் முத்திரைப் பதித்து, ‘பூஜாங் லாபோக்’, ‘இபு மெர்துவா கு’ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் தனது சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார் பி.ரம்லி.
காலத்தால் என்றும் நினைவில் கொள்ளும் ‘கெத்தாரான் ஜிவா’ உள்ளிட்ட 250 பாடல்களுக்கு மேல் பி.ரம்லி இசையமைத்திருக்கிறார்.
1929-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ம் தேதி, பினாங்கு மாநிலத்தில் பிறந்த பி.ரம்லி, கடந்த 1973-ம் ஆண்டு, தனது 44-வது வயதில், மாரடைப்பால் காலமானார்.
அவரது நினைவாக இன்றும் மலேசிய அரசு, கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள், சாலைகள் எனப் பலவற்றிற்கு பி.ரம்லியின் பெயரை வைத்திருப்பதோடு, அவரது பெயரில் உயரிய விருதுகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.