கோலாலம்பூர் – மலேசியக் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில், போட்டியிட்ட அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா, தான் அதிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.
இதன் மூலம், அதில் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், அப்பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார். வரும் சனிக்கிழமை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பதவிக்கு, ஜோகூர் இளவரசர், அனுவார் மூசா ஆகியோரோடு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின், காற்பந்து சங்கத்தின் நேர்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ அசே சே மாட் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கைரியும், அசே சே மாட்டும் போட்டியிலிருந்து விலகினர். தற்போது அனுவார் மூசாவும் போட்டியிலிருந்து விலகிவிட்டதால், ஜோகூர் இளவரசர் போட்டியின்றி தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.