Home Featured நாடு மீட்கப்பட்ட 2 மலேசியர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்!

மீட்கப்பட்ட 2 மலேசியர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்!

1533
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர் – அபு சயாப் தீவிரவாத அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மலேசியர்கள் இருவரும், கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, இன்று திங்கட்கிழமை காலை அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவர்கள் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குடும்பத்தாரிடமும் பேசி தக்க உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தார்.

“8 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டு வந்து, குடும்பத்தாருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர்கள் விளக்கமாகத் தெரிவித்தார்கள். அதேவேளையில், அவர்கள் பிணையில் இருந்த போது, அவர்களின் குடும்பம் எவ்வளவு நெருக்கடியைச் சந்தித்தது என்பதையும் நான் அறிந்தேன்” என்று நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், அப்துல் ரஹிம் சும்மாஸ் (வயது 62), தாயுடின் அஞ்சுட் (வயது 45) ஆகிய இருவரும் காயங்கள் அடைந்திருப்பதாகவும், அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

“தாயுடினுக்கு கண்பார்வையில் சில பிரச்சினைகள் இருக்கின்றது. அதற்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அப்துல் ரஹிமால் நடக்க முடியவில்லை. அவரது காலில் சில பிரச்சினைகள் உள்ளன. எனவே செலாயாங் மருத்துவமனையில் முதல் தர வார்டில் அவர்களை அனுமதிக்கவும், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அவர்களின் காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று நஜிப் தெரிவித்தார்.

மேலும், அபு சயாப்பின் பிடியில் இருக்கும் இன்னும் மூன்று மலேசியர்களான மொகமட் ரிட்சுவான் இஸ்மாயில் (வயது 32), ஃபாண்டி பாக்ரான் (வயது 26), மொகமட் சுமாடி ரஹிம் (வயது 23) ஆகிய மூவரையும் விடுவிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் நஜிப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, லஹாட் டத்து கடற்பகுதியில் அப்துல் ரஹிம் மற்றும் தாயுடின் உட்பட 5 மலேசியர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அபு சயாப் இயக்கத்தினரால், கடத்திச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஜோலோஸ் தீவு பகுதியில், கடந்த வாரம் வியாழக்கிழமை பிலிப்பைன்ஸ் கடற்படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், அபு சயாப்பில் படியில் வைக்கப்பட்டிருந்த அப்துல் ரஹிமும், தாயுடினும் மீட்கப்பட்டனர்.