போப்பால் – இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்காரா அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி, கடந்த மார்ச் 22-ம் தேதி மாயமானார். இந்நிலையில், மருத்துவமனை அருகே சற்று தூரத்தில் நாய்கள் தின்ற நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 10 மாதங்களில் இதற்கு முன்பு இது போல் 4 சம்பவங்கள் நடந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது 5-வது சம்பவம் ஆகும்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனை அருகே மிக மோசமான துர்நாற்றம் வீசுவதாக, மருத்துவர்களும், நோயாளிகளும் புகார் அளித்ததையடுத்து, துப்புறவாளர்கள் சிலர் துர்நாற்றம் வரும் பகுதிக்குச் சென்ற போது, அங்கு விலங்குகள் தின்ற நிலையில், அம்மூதாட்டியின் தலை மற்றும் உடல் பகுதியில் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர் என கோட்வாலி காவல்நிலையத்தின் தலைமை அதிகாரி முகேஸ் கவுர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், நாய்கள் இழுத்துச் சென்ற போது, அம்மூதாட்டி உயிருடன் இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. கிட்டத்தட்ட 5-லிருந்து 7 அடி வரை, சடலம் புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் காவல்துறை கூறுகின்றது.
இது கொடுமை என்னவென்றால், பிஸ்மில்லா பாய் என்ற அந்த 70 வயது மூதாட்டியின் சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்புறவாளர்கள் கண்டறியும் வரை, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் மாயமான விவரம் மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரியவில்லை என்பது தான்.