Home Featured நாடு கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?

கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?

1018
0
SHARE
Ad

Kulasegaran

கேமரன் மலை – கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரத்தினால், 14-வது பொதுத் தேர்தலைக் குறிவைத்து, தற்போது ஜசெக வட்டாரங்களில் சில மாற்று சிந்தனைகள் உதித்திருக்கின்றன என ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் நடப்பு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அல்லது நடப்பு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் (படம்) ஆகிய இருவரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என ஜசெக வட்டாரங்களில் திருப்புமுனையாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று காட்ட வேண்டுமானால் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட தொகுதிகளில் இந்த முறை ஜசெகவின் பிரபலமான தலைவர்களை நிறுத்தினால், அந்தத் தொகுதிகளை வெல்ல முடியும் என்ற கண்ணோட்டத்தில், ஜசெகவில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் முதல் கட்டமாக, மீண்டும் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவேன் என ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருக்கின்றார். கடந்த முறை எதிர்ப்பு அலைகளுக்கிடையில் கேலாங் பாத்தாவில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்ற கிட் சியாங், இந்த முறையும் சுலபமாக வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், ஜோகூர் மாநிலத்துக்காரரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் எதிர்க்கட்சிகளோடு இணைந்திருப்பதுதான்.

அதே போன்று, பினாங்கு மாநிலத்தில், லிம் குவான் எங் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவார் என்றாலும், நாடாளுமன்றம் என்று வரும்போது மீண்டும் பாகான் தொகுதியில் பினாங்கிலேயே போட்டியிடாமல், வேறு சிரமமான ஒரு தொகுதிக்கு சென்று வென்று காட்ட முற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ramasamy-dap-deputy-chief-minister

அந்த வகையில், மீண்டும் பினாங்கு துணை முதல்வராக பி.இராமசாமி (படம்) தொடர வேண்டும் என ஜசெக தலைமைத்துவம் விரும்பினால், அவர் பினாங்கு சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பிறை தொகுதியிலே அவர் மீண்டும் போட்டியிடக் கூடும்.

ஆனால், இராமசாமியை நாடாளுமன்ற உறுப்பினராக்கவும், பினாங்கு துணை முதல்வர் பதவிக்கு மாற்று வேட்பாளரை நிறுத்தவும் ஜசெக முடிவு செய்தால், பி.இராமசாமி போட்டியிட பொருத்தமான நாடாளுமன்றத் தொகுதி கேமரன் மலைதான் எனக் கருதப்படுகின்றது.

அதே சமயம் இராமசாமி பினாங்கு துணை முதல்வராகத் தொடர்ந்தால், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்ற ஜசெக, குலசேகரனைக் களமிறக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இன்றைய நிலையில் 2013-இல் கேமரன் மலையில் போட்டியிட்ட எம்.மனோகரனே மீண்டும் அங்கு ஜசெக சார்பில் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. கடந்த முறை இவர், மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவிடம் 462 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார் என்பதால் மீண்டும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் ஜசெக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

cameron-highlands-2013-ge-results2013 பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி முடிவுகள்…

ஆனால், மீண்டும் இந்தத் தொகுதியை வென்றெடுக்கும் நோக்கில், இங்கு மஇகா பொருத்தமான ஒரு வேட்பாளரை களமிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களின் இந்தத் தொகுதியை மற்ற எந்தக் கட்சிக்கும் மஇகா விட்டுக் கொடுக்காது என்றும் மஇகா தலைமைத்துவம் அறிவித்திருக்கின்றது.

இருப்பினும், இந்தத் தொகுதியில் போட்டியிட மைபிபிபி சார்பாக கேவியஸ் முயற்சிகள் எடுத்து வருகின்றார். அங்கு அடிக்கடி சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார்.

கேமரன் மலை தொகுதியை விட்டுக் கொடுக்க மஇகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தேசிய முன்னணி தலைமைத்துவமும் மைபிபிபி கட்சிக்கு வேறு ஒரு தொகுதியைத் தான் ஒதுக்கும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய இழுபறியினால், மஇகாவிடம் இருந்து பிடுங்கி, மைபிபிபி கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கினால், அதனால், தொகுதிக்கான வெற்றி வாய்ப்புகள்தான் பாதிக்கப்படும் என்பதால், கடந்த மூன்று தவணைகளாக மஇகா வென்று வந்துள்ள கேமரன் மலை மீண்டும் வழக்கம்போல அந்தக் கட்சிக்கே தேசிய முன்னணி தலைமைத்துவம் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில்தான், மஇகா-மைபிபிபி இடையில் நிகழும் இழுபறியினால், ஓர் வலுவான-பிரபலமான- வேட்பாளரை களமிறக்குவதன் மூலம், கேமரன் மலைத் தொகுதியை இந்த முறை வென்றெடுக்க முடியும் என ஜசெக வட்டாரங்கள் கருதுகின்றன.

அந்த வேட்பாளர்,

இராமசாமியா? குலசேகரனா? அல்லது மீண்டும் மனோகரனா? என்பது கூடிய விரைவில் தெரியவரும்!

-இரா.முத்தரசன்