Home Featured நாடு “தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

1323
0
SHARE
Ad

subra-bangi-tamil school-opening

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல் ஊடகங்கள் குறித்து வெளியிட்ட சில கருத்துகளையும் கேட்க நேர்ந்தது.

பத்திரிக்கைகள் என்பவை சமுதாயத்தின் நிலைமைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடிகள் போன்றவை என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நமது இந்திய சமுதாயத்தில் கடந்த காலங்களில் சில சமுதாய மாற்றங்கள் நிகழ்வதற்கும், சிந்தனைப் புரட்சிகள் உருவாவதற்கும், அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும், சமுதாயச் சீர்கேடுகளை, சமூக அவலங்களை எடுத்துக் காட்டி அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதற்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் உணர்வுகள் நாடெங்கும் பல்கிப் பெருகுவதற்கும்,

செலாஞ்சார் அம்பாட் போன்ற சமூக அவலங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதற்கும்,

காரணம் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

சமுதாயத்தின் பல தேவைகளுக்கு நிதி திரட்டித் தந்ததும் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

ஓட்டப் பந்தய வீரரான சரவணனுக்கு சில காரணங்களால், ஒரு கார் வழங்கப்படுவது மறுக்கப்பட்ட போது, நீங்கள் தராவிட்டால் என்ன, எங்கள் சமுதாயமே ஒன்று திரண்டு தருவோம் என்ற அறைகூவலோடு ‘சமுதாயக் கார்’ வழங்கப்பட்டதும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் மூலமாகத்தான்!

subra-bangi tamil school-building openingபாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தை சுப்ரா திறந்து வைக்கிறார் – அருகில் கல்வி துணை அமைச்சர் கமலநாதன்…

ஆனால், அண்மையக் காலங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்களின் இத்தகைய ஆளுமையை, அணுகுமுறைகளை, தொடர்ந்து நிலைநாட்டிவரத் தவறிவிட்டனவோ என்ற எண்ணம் பரவலாக சமுதாயத்தில் எழுந்துள்ளது என்பதையும், சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதைத்தான் டாக்டர் சுப்ராவும் தனது உரையில் பிரதிபலித்தார் “தமிழ்ப் பத்திரிக்கைகள் மரபில் இருந்து மாறிவிட்டார்கள்” என்ற கூற்றின் மூலம்!

காரணம், ஒரு சில பத்திரிக்கைகள், மஇகாவைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும், தொடர்ந்து சாடியும், அவமதித்தும், அவர்களின் குறைபாடுகளை, செய்யாமல் விட்ட சில அம்சங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்தியும் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இதில் எந்தத் தவறும் இல்லை. பாங்கி தமிழ்ப் பள்ளி இணைக்கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றியபோதும், டாக்டர் சுப்ரா இதைத்தான் வலியுறுத்தினார். “தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்” என்றுதான் அவரும் கூறினார்.

“ஆனால், சில பத்திரிக்கைகள், தவறுகளை மட்டுமே பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன. அதே மஇகாவும், அதன் தலைவர்களும் பல நல்ல காரியங்கள் செய்யும்போது அது குறித்து எதுவும் எழுதாமல் வேண்டுமென்றே மூடி மறைத்து விடுகின்றன” என்ற தனது ஆதங்கத்தையும், சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தற்போது தமிழ்ப் பத்திரிக்கைகளிடையே பரவலாகக் காணப்படும் ஒரு போக்காக மாறிவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சீனப் பத்திரிக்கைகளின் அணுகுமுறையோடு ஒப்பீடு

பிடிக்காத தலைவர் என்றால் அவரை ஒரேயடியாகச் சாடுவதும், ஆனால், அதே தலைவர் ஏதாவது நல்லது செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் பத்திரிக்கைகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் டாக்டர் சுப்ரா சீனப் பத்திரிக்கைகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

subra-bangi tamil school-students

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், உள்ளூர் மஇகா தலைவர்கள், ஆசிரியர்கள் சூழ, மாணவர்களோடு அளவளாவும் சுப்ரா…

மேலோட்டமாக அவரது உரையைக் கேட்டவர்களுக்கு சீனப் பத்திரிக்கைகளை அவர் உயர்த்தி பேசியது போல் தோன்றியிருக்கலாம். எந்த கட்டத்திலும் தமிழ்ப் பத்திரிக்கைகளை விட சீனப் பத்திரிக்கைகள் உயர்ந்தவை என்று அவர் தனது உரையில் குறிப்பிடவே இல்லை. மாறாக, சீனப் பத்திரிக்கைகள் பொதுவாகப் பின்பற்றும் ஓர் அணுகுமுறையை, அவர்களின் ஊடக நெறிமுறையைத்தான் அவர் தனது உரையில் விளக்கினார்.

சீனப் பத்திரிக்கைகள் என்று வரும்போது எப்போதும், அவர்கள் முன்னுரிமை வழங்குவது அவர்களின் சீன சமூகப் பிரச்சனைகளுக்குத்தான். மக்கள் நலன்களுக்குத்தான்!

அரசாங்கத்தின் ஒரு முடிவினால், செயல்பாட்டால் சீன சமூகத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், அதற்குக் காரணம், தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கமா, அல்லது ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கமா, மசீசவா, அல்லது கெராக்கான் கட்சியா என்றெல்லாம் பாராமல், அந்தப் பாதிப்பு குறித்தும், அதனால் சமுதாய நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சீனப் பத்திரிக்கைகள் சாடியும், அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் எழுதத் தவறுவதில்லை.

அதே சமயம், சீன சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நற்காரியம் அமுல்படுத்தப்பட்டதென்றால், அதற்கு பாராட்டு தெரிவிக்கவும் கட்சி பாகுபாடின்றி சீனப் பத்திரிக்கைகள் தயங்காமல் முன்வரும்.

இதனைப் பலமுறை சீனப் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மாலை வேளைகளில் வெளியிடப்படும் சீனப் பத்திரிக்கைகள், நாளை பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு, வணிக நிலவரங்கள், சந்தை நிலவரங்கள் என்பது வரையிலான பல நல்ல பயனான வணிகத் துறைத் தகவல்களை வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கும் சீன சமூகத்திற்கு உதவும் வகையில் வெளியிடுகின்றன.

இதுபோன்ற பாணியைத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைத்தான் டாக்டர் சுப்ரா எடுத்துக் காட்டியிருந்தார்.

மேலும், தனது சுகாதார அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் சில நல்ல நடவடிக்கைகள், தனது தொகுதியான சிகாமாட்டில் மேற்கொள்ளப்பட்டும் சிறந்த திட்டங்கள், இந்திய சமுதாயத்திற்கு பயன் தரும் மஇகாவின் அணுகுமுறைகள் போன்ற அம்சங்களை அவ்வப்போது சீனப் பத்திரிக்கைகள் பாராட்டி வந்திருக்கின்றன என்பதையும் டாக்டர் சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுபோன்ற சரிசமமான, நியாயமான அணுகுமுறையைத் தமிழ்ப் பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ஆரூடங்கள் முழுக்க, முழுக்க கற்பனைகளாக இருக்கலாமா?

தமிழ்ப் பத்திரிக்கைகள் சில சமயங்களில் அரசியல் பரபரப்புக்காக வெளியிடும்  அரசியல் ஆரூடங்களை டாக்டர் சுப்ரா மற்றொரு உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

சில ‘நம்பத் தகுந்த வட்டாரத்’ தகவல்களை, அரசியல் பரபரப்புக்காக, ஊடகங்கள் வெளியிடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. காலங் காலமாக எல்லா ஊடகங்களும் எப்போதும் பின்பற்றும் நடைமுறைதான் அது!

ஆனால், அதில் ஏதாவது ஓர் அடிப்படை உண்மையோ, பின்னணியோ, பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவலோ இருக்க வேண்டும். தொடர்ந்து அந்தத் தகவல்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் வண்ணம், நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில் அந்த அரசியல் ஆரூடங்களை உருவெடுக்கச் செய்ய வேண்டும்.

மாறாக, முழுக்க முழுக்க இல்லாத ஒன்றை, வெறும் கற்பனைக் கதைகளை அரசியல் ஆரூடம் என்ற பெயரில் உருவாக்கம் செய்யும்போது, அவை நீர்க்குமிழிகள் போல, கூடியவிரைவில் சிதறி விடும்.

இதைத்தான் தமிழ்ப் பத்திரிக்கைகள் கற்பனாவாதிகளாக மாறி சில செய்திகளை வெளியிடுகின்றன என்னும் ரீதியில் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் வணிக ரீதியிலும், சமுதாய ஆதரவிலும் மேலோங்க வேண்டும், அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கும், கனவுகளுக்கும் ஏற்ப செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டாக்டர் சுப்ரா முன்வைத்திருக்கும் இந்தக் கருத்துகள், ஆரோக்கியமான சில விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறது.

-இரா.முத்தரசன்