வாஷிங்டன் – தீவிரவாதிகளைக் குறி வைத்து, பஷார் அல் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு போர் விமானங்கள் மூலம், இரசாயன வெடிகுண்டு வீசியதில், அப்பாவி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.
இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் வீசப்பட்ட இந்த இரசாயனத் தாக்குதலில், பலி எண்ணிக்கை 50-க்கும் மேல் அதிகரித்து வருவதாக ஐ.நா மனித உரிமை கண்காணிப்பகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதனால், இன்று புதன்கிழமை, இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசிக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் சிரிய இராணுவம், தாங்கள் அது போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
காலை 6.30 மணியளவில், தான் உறக்கத்தில் இருந்த போது மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டு எழுந்ததாகவும், சம்பவம் நடந்த இடத்தை அடைந்த போது, அங்கு நிறைய பேர் தரையில் விழுந்து கிடந்ததாகவும் எதிர்கட்சி சார்பு இட்லிப் ஊடக மையத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஹுசைன் கயல் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
வீதியில், குழந்தைகள் பலர் மூச்சுத் திணறிய நிலையில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.