Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்!

திரைவிமர்சனம்: ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்!

1120
0
SHARE
Ad

Kaatru Veliyidai 1கோலாலம்பூர் – காதலில் இருக்கும் வெவ்வேறு விதங்களை, வடிவங்களை அலசி ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ப சொல்வது தான் இயக்குநர் மணிரத்னத்தின் பிரத்தியேக பாணி.

அந்தப் பாணியிலிருந்து சிறிதும் விலகாமல், தனது தனித்துவமான காட்சியமைப்புகளுடன், ஒரு போர்விமானியின் வாழ்க்கையையும், அவனது காதலில் ஏற்படும் பிரச்சினைகளையும், ‘காற்று வெளியிடை’ ஆகச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

எப்போதும் குண்டுச்சத்தமும், பதற்றமான சூழலும் நிறைந்த இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், போர்விமானங்களை இயக்கும் அதிகாரி வி.சி (கார்த்தி). விபத்து ஒன்றில் சிக்குகிறார். உயிருக்குப் போராடும் நிலையில், இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு சிகிச்சையளிக்கிறார் மருத்துவர் லீலா (அதீதி). சிகிச்சையிலிருந்து தேறும் வி.சிக்கு, லீலாவின் மீது காதல் வருகிறது. லீலாவுக்கும் வி.சி மீது காதல் வருகிறது. காதலிக்கத் தொடங்கும் போது தான் இருவரும் தங்களுக்கிடையே உள்ள இடைவெளியை உணருகிறார்கள். அந்த நேரத்தில் கார்த்தி எதிரிகளிடம் சிக்கிக் கொள்கிறார்.

#TamilSchoolmychoice

எதிரிகளிடமிருந்து கார்த்தி தப்பிக்கிறாரா? இருவருக்கும் உள்ள இடைவெளியை, உண்மையான காதல் நிரப்புகிறதா? என்பது தான் படத்தின் சுவாரசியம்.

நடிப்பு

இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான கார்த்தி. சிக்கென்ற உடல்வாகு. கன்னம் ஒட்டிய இராணுவ வீரரின் முகம், கடுகடுக்கும் கோபம், காஷ்மீர் பனிக்கு ஏற்ப வெள்ளை வெளேர் நிறம் என அசத்தியிருக்கிறார். ஏர்போர்ஸ் ஆபீசர் உடையில் அவ்வளவு அழகாக இருக்கிறார். குறிப்பாக உடல்மொழியால் கவர்ந்து இழுக்கிறார்.

சிரிக்கலாமா? வேண்டாமா? என்ற லேசான புன்னகை. வசனத்தை விட சைகையிலேயே புரிய வைக்கும் அங்க அசைவுகள் என இயக்குநர் சொல்வதைக் கேட்டு நன்றாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

“நான் குண்டு போட்டு அழிக்கிறவன் லீலா.. அழிக்கிறது தான் என் இயல்பு.. நீ டாக்டர்.. உசிரக் காப்பாத்துறவ.. உனக்கும் எனக்கும் செட் ஆகாது” என்று காதலியிடம் தனது இயலாமையை வெளிப்படுத்துவது, “உன்னைக் காதலிப்பேன். நீ என்னை விரும்புனாலும், விரும்பாட்டாலும் காதலிப்பேன்.. நீ என்னை வெறுத்தாலும் காதலிப்பேன்” என்று கண் கலங்கி உருகுவதுமாக கார்த்தி நடிப்பு அருமை.

Aditiஅதீதி.. பால் வடியும் முகம். அறிமுகக் காட்சியே அசத்தல் அழகு. மென்மையை பேச்சில் மட்டுமல்ல, படம் முழுவதும் தனது நடிப்பிலும் காட்டியிருக்கிறார். தமிழுக்கு நல்வரவு. என்றாலும், கொஞ்சம் இளம் வயதிலேயே வந்திருக்கலாம் என்ற வருத்தமும் படம் பார்க்கும் போது வருகிறது. டாக்டர் லீலா ஆப்ரஹாம் கதாப்பாத்திரத்தில், காதலில் விழுவதும், பின்னர் தனது தன்மானத்தை காப்பாற்றுவதற்காக தனது காதலனிடம் போராடுவதுமாக ஈர்க்கிறார்.

“ஒன்னு ராணி மாதிரி நடத்துற.. இல்லன்னா கீழே போட்டு மிதிக்கிற”, “நான் டாக்டருங்கிறதுனால பிரச்சினையா? இல்ல பொண்ணுங்கிறதுனால பிரச்சினையா?, இப்படியாக அதீதிக்கு உணர்வுப்பூர்வமான வசனங்களைப் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நடிக்க அதிகம் காட்சிகள் இல்லாவிட்டாலும், படம் முழுவதும் அதீதியுடன் தோழியாக வந்து கவர்ந்திழுக்கிறார் ருக்மணி. (எங்க போனீங்க ருக்மணி இவ்வளவு நாளா?).

“கனாக் காண்கிறேன்.. கனாக் காண்கிறேன் கண்ணாளனே” என்ற பாடலைச் சொன்னால் ருக்மணி யாரென்று சட்டென உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

அடுத்து, டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி.. இரண்டு பேருமே நகைச்சுவையில் கலக்கக் கூடியவர்கள். ஆனால் இரண்டு பேரையுமே இராணுவத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டி சீரியஸ் ஆக்கியிருக்கிறார் இயக்குநர். மற்றபடி படத்தில் தெரிந்த முகங்களே இல்லாமல் போனது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

மணிரத்னம் ஸ்பெஷல்

திரைக்கதையைப் பொறுத்தவரையில், ரசிகர்களை மிகவும் யோசிக்க வைக்கவில்லை. ஒரு துன்பத்தில் சிக்கியிருக்கும் கார்த்தி, தனது காதலியைப் பற்றியும், அவளை தான் துன்பப்படுத்தியதையும் நினைவு கூறுகிறார். அது பிளாஷ்பேக்காகக் காட்டப்படுகிறது. பின்னர் நிஜ வாழ்க்கைக்கு வரும் கார்த்தி, தனது காதலியைத் தேடிப் போகிறார். அவ்வளவு தான்.

Kaatru Veliyidai2என்றாலும், திரைக்கதையில் எங்கெல்லாம் சுவாரசியங்களை வைக்க முடியுமோ அதனை வைத்திருக்கிறார் இயக்குநர். ஏதோ நாமும் ஒரு இராணுவக் குடியிருப்பில் வசிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது காட்சியமைப்பு.

அதேவேளையில், ஒரு இராணுவ வீரன் எப்படிப்பட்ட மனநிலையோடு இருப்பான் என்பதை வி.சி கதாப்பாத்திரத்தின் மூலம் நன்றாகவே சொல்லியிருக்கிறார்.

போர் விமானங்களை அச்சமின்றி இயக்கப் பயிற்சி பெற்ற வீரன், பெண்ணை அனுசரித்துப் போவதிலும், திருமணத்தின் மீதும் பற்று இல்லாமல் இருப்பதும், குழந்தை என்றவுடன் யோசிப்பதுமாகக் காட்டிய விதம் மிகவும் அருமை.

என்றாலும், சாதி அடையாளத்தைக் கொண்ட கதாப்பாத்திரப் பெயர்கள், பெண்மையை அடக்கி ஆள நினைக்கும் கதாநாயகனின் குணம், நிறைமாத கர்ப்பிணிக்கு திருமணம் செய்து வைப்பது, “இவன் தான் வீட்டுல கடைசி.. மிச்ச மீதி, கசடு” என்று மாற்றுத்திறனாளி தம்பியை வர்ணிப்பது என படத்தில் இடம்பெற்றிருக்கும் சில விசயங்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்படலாம்.

அதேவேளையில், படத்தின் சில காதல் காட்சிகள், சில தரப்பு ரசிகர்களுக்கு சலிப்பைத் தரக்கூடும். காரணம் அதில் இருக்கும் செயற்கைத்தனமான இழுவை. அது மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால் மற்ற ரசிகர்களுக்கு போரடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒளிப்பதிவு, இசை

Kaatru Veliydai 3ரவி வர்மனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் அழகு. எங்கும் பனிபடர்ந்த மலைப்பகுதிகள், போர்விமானங்கள், பாகிஸ்தான் எல்லைப்பகுதி என எல்லாமே பளீச்சென பதிவாகியிருக்கின்றது.

காட்சி ஒன்றில், டெல்லி கணேசும், அதீதியும் வீட்டின் போர்ட்டிகோவில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள், வீட்டின் மேல் போர் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். அக்காட்சி அவ்வளவு அழகு. இப்படியாக ரவி வர்மன் படத்திற்குப் பக்க பலம் சேர்த்திருக்கிறார்.

ஏஆர்.ரஹ்மான் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு இணைந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. ‘வான் வருவான்’, ‘நல்லை அல்லை’, ‘அழகியே’ போன்ற பாடல்கள் அவருக்கே உரிய தனித்துவம்.

மொத்தத்தில், ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்! அக்காதலைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவே திரையரங்கு சென்று பார்க்கலாம்.

ஆனால், ஓ.கே.கண்மனியின் காதலை ரசித்துவிட்டு, அதே மனநிலையோடு, இந்தப் படத்திற்குச் சென்றால் ஏமாற்றமே. காரணம். இது வேறு மாதிரியான காதல்.

– ஃபீனிக்ஸ்தாசன்