சென்னை – விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான ‘நெருப்புடா’-வின் பாடல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை அன்னை இல்லத்தில் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இணையத்தில் சினிமா விமர்சனம் செய்பவர்கள் குறித்து விஷால் பேசுகையில், சினிமா விமர்சனம் செய்பவர்கள், திரைப்படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகு நான்காவது நாள் விமர்சனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரைப்படம் வெளியாகி 3 காட்சிகள் ஓடுவதற்குள் விமர்சனம் செய்வது முறையல்ல என்றும் விஷால் குறிப்பிட்டார்.
மேலும், சில பத்திரிகையாளர்களும், சினிமா விமர்சனம் செய்பவர்களும், பேஸ்புக், டுவிட்டர், யுடியூப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களின் மூலமாக திரைப்படங்களின் வசூலை மிகவும் பாதிப்படையச் செய்வதாக விஷால் தெரிவித்தார்.
அது அவர்களின் கருத்துச் சுதந்திரமாக இருந்தாலும் கூட, அதனை நான்காவது நாள் செய்யும் படி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கச் செயலாளர், நடிகர் மற்றும் மனிதன் என்ற அடிப்படையில் இதை தான் கேட்டுக் கொள்வதாக விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் இது குறித்துப் பேசுகையில், தாராளமாக திரைப்படங்களை விமர்சனம் செய்யுங்கள் ஆனால் மனம் புண்படும் படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.