Home Featured நாடு டாக்டர் சுப்ரா தலைமையில் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடத் திறப்புவிழா!

டாக்டர் சுப்ரா தலைமையில் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடத் திறப்புவிழா!

706
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்புவிழா இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர் சுப்ராவுடன், துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதனும் கலந்து கொண்டார்.

Subra1142017

#TamilSchoolmychoice

புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து டாக்டர் சுப்ரா உரையாற்றுகையில், “இன்று சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. கடந்த 1925-ம் ஆண்டு சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. தோட்டப்புற வாழ் மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் பயின்று வந்தனர்.”

“ஆரம்பத்தில், ஈய வயலை ஒட்டி அமைந்திருந்தது தான் இந்தச் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 1988-ம் ஆண்டு இப்பள்ளிக்கு மாற்று இடமொன்று வழங்கப்பட்டு, இன்று “கம்போங் லிண்டோங்கான்” எனும் இடத்தில் 3 மாடிக் கட்டடத்துடன் சகல வசதிகளையும் உள்ளடக்கிக் கட்டித் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இப்பள்ளியை மாற்று இடத்திற்குக் கொண்டு வர பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.”

தனது உரையில் சுப்ரா மேலும் கூறியதாவது:-

“நம் நாட்டில் 10 மாணவர்களுக்குக் குறைவாக இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 18 ஆகும். சில பள்ளிகளில் 3 மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், ஒரு பள்ளிக்குக் குறைந்தபட்சம் 11 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இச்சூழலில் நியாயமாகச் சிந்தித்தால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென்பதாகத்தான் இருக்கும். அந்த நியாயமான சிந்தனை இல்லாத காரணத்தாலும் உணர்ச்சியின் அடிப்படையினாலும் இப்பள்ளி மாற்று இடம் கிடைத்தும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.”

“தற்போது அத்தகையச் சவால்களைத் தாண்டி அரசாங்கத்தின் உதவியாலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் என இரு தரப்பினரின் ஒத்துழைப்பாலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இப்பள்ளியைப் பார்க்கும், பொழுது  மனத்திற்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றது. தற்பொழுது இப்பள்ளி மேலும் 300 மாணவர்கள், 22 ஆசிரியர்களுடன் புதுப்பொலிவில் காட்சி அளிக்கின்றது.”

“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் பிரதமராகப் பதவியேற்றக் காலம் தொட்டு, கடந்த 2010 -ம் ஆண்டு தொடங்கி தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் ஏறக்குறைய 80 கோடி வெள்ளி ஒதுக்கீட்டினைச் சிறப்பாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”

“இந்திய சமுதாயத்திற்கு உதவ வேண்டுமென்றால் நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகளின் நிலை உயர்ந்து வளர்ச்சி காண வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்று, தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு ஒதுக்கீட்டினை வழங்கி வருகிறார் பிரதமர் அவர்கள்.”

“எங்களைப் பொறுத்தவரையில், நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டும். அப்பொழுது தான் மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் போதிக்க வகைச் செய்ய முடியும். கடந்த ஆண்டு பேராசிரியர் என்.எஸ் இராஜேந்திரன் அவர்களது தலைமையில் நாடளாவிய அளவில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டு, தமிழ்ப்பள்ளிகளுக்கென்று எதிர்கால வரைவுத் திட்டம் ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளது.”

“அதில் உள்ள கோட்பாடுகளில் ஒன்று தமிழ்ப்பள்ளிகளின் வசதி. இப்பொழுது இருக்கக்கூடிய நவீன வசதிகள் அனைத்தும் தமிழ்ப்பள்ளிகளில் இருக்க வேண்டும். இரண்டாவது, மாணவர்களின் அடைவுநிலையை உயர்த்துவதும் இருக்கக்கூடிய பலவீனங்களைக் களைவதற்கும் கற்றல் கற்பித்தலில் சீரமைப்பு முறைகள் அனைத்தும் அத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.”

Subra1142017(a)

“இதன்வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவுநிலை தொடர்ந்து உயர வேண்டுமென்பதே எங்களது நோக்கமாகும். ஏனென்றால், மற்ற பள்ளிகளைப் போன்று தமிழ்ப்பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டுமென்பதே பிரதமர் அவர்களின் நோக்கமாகும். இதனை அவர் அடிக்கடி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் நாங்களும் செயல்பட்டு வருகின்றோம்.”

“தரமான கல்வி, தரமான மாணவர்கள், தரமான ஆசிரியர்கள் என மொத்தத்தில் தரமானத் தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கும் நோக்கத்தோடு நாங்கள் தொடர்ந்து போராடி, முயற்சித்து, திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றோம். சில நேரங்களில் மாநில அரசாங்கம் நம் கைவசம் இல்லாததால் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இதனையும் சரிசெய்ய வேண்டும். அது மக்கள் கையில்தான் இருக்கின்றது.”

“இந்நாட்டில், நம் சமுதாயத்திற்குத் தமிழ்க்கல்வி மிக மிக முக்கியம். தமிழர்களைத் தமிழர்களாகப் பார்ப்பதற்கும், தமிழ்மொழி இந்நாட்டில் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கும் தமிழ்க்கல்வி அவசியமாகின்றது. மேலும், தமிழ்ப் பண்பாடு தொடர்ந்து காக்கப்படுவதற்கும் தமிழ்க்கல்வி அவசியமாகின்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் எவ்வித தடங்கல்களும் இருக்கக்கூடாது. அவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் கால் பதித்துப் பட்டதாரிகளாக உயர வேண்டும்.”

“இதனை உறுதி செய்வதற்காகவே ம.இ.கா தொடர்ந்து போராடி வருகிறது. இனியும் போராடும். இதற்குச் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியமானது. சமுதாய வளர்ச்சி அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல மாறாக சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்ற சிந்தனை தெளிவும் முதிர்ச்சியும் அனைவருக்கும் இருக்க வேண்டுமென இதன்வழி கேட்டுக் கொள்கிறேன்.” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தனது உரையில் தெரிவித்தார்.