கோலாலம்பூர் – மாயமான போராட்டவாதியும், முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான பீட்டர் சோங், தாய்லாந்து எல்லையில், காணப்பட்டதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
புக்கிட் அம்மானில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காலிட் இது குறித்துப் பேசுகையில், “அவர் பேருந்து ஒன்றின் மூலம் எல்லையைக் கடக்கும் படம் ஒன்று எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, காலை 6.30 மணியளவில் தாய்லாந்து எல்லையை சோங் கடந்தார் என்றும் காலிட் குறிப்பிட்டார்.
“அவர் தாய்லாந்தில் இருக்கிறார். அவர் அங்கிருக்கும் நோக்கம் என்ன? என்பது தெரியவில்லை. ஆனால் அவர் கடத்தப்பட்டதாக மக்களைக் குழப்புபவர்களை எச்சரிக்கிறேன்” என்றும் காலிட் கூறினார்.
இந்நிலையில், சோங்கைக் கண்டுபிடிக்க, தாய்லாந்து அதிகாரிகளுடன் தாங்கள் பேசி வருவதாகவும் காலிட் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, இரவு, வீட்டை விட்டு வெளியேறிய சோங், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் அவரது குடும்பத்தினர், கடந்த வாரம் சனிக்கிழமை காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனிடையே, கடந்த மார்ச் 31-ம் தேதி, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், தன்னிடம் வந்து “இப்போதெல்லாம் நிறைய பேர் திடீரென மாயமாகிவிடுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறியதாக சோங் தனது பேஸ்புக்கில் விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.