Home Featured நாடு சிலாங்கூர் வழிபாட்டுத்தலங்கள் விவகாரம்: விதிமுறைகள் தற்காலிக நிறுத்தம்!

சிலாங்கூர் வழிபாட்டுத்தலங்கள் விவகாரம்: விதிமுறைகள் தற்காலிக நிறுத்தம்!

769
0
SHARE
Ad

BatuCave1கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தில், இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதில், அம்மாநில அரசு விதித்திருந்த புதியக் காட்டுபாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியதையடுத்து, அவ்விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிலாங்கூர் வழிகாட்டல் கையேடு மற்றும் சிலாங்கூர் தரமான திட்டமிடல் நடைமுறை ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த அந்த விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதால், தற்காலிகமாக அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன என சிலாங்கூர் மாநில மூத்த ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்திருக்கிறார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் வழிகாட்டி கையேடின் மூன்றாம் பதிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில தரமான திட்டமிடல் ஆகியவற்றில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிய வழிபாட்டுத்தலங்கள் நிறுவுவதில் பல புதியக் கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதனையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

#TamilSchoolmychoice

அதன் படி, இஸ்லாமியர்களின் வீடுகள் இருக்கும் பகுதியில், சுமார் 50 மீட்டர் தொலைவு வரை, இஸ்லாம் அல்லாதவர்களின் வழிப்பாட்டுத்தளங்கள் நிறுவக்கூடாது என்றும், 200 மீட்டர் பரப்பளவிலுள்ள குடியிருப்பாளர்களின் அனுமதியோடு தான் புதிய இஸ்லாம் அல்லாதோரின் வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதேவேளையில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களோ, தேவாலயங்களோ அப்பகுதியில் அமைந்திருக்கும் மசூதியின் உயரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும் என்றும், வர்த்தகப் பகுதிகளில் இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தளங்கள் கட்டக்கூடாது என்றும் கூறப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட சிலாங்கூர் மாநில இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான கமிட்டி, அதனை மறு ஆய்வு செய்ய முடிவெடுத்தது.

அதேவேளையில், பல்வேறு இஸ்லாம் அல்லாதோர் அமைப்புகள் சிலாங்கூர் அரசின் இக்கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.