கோலாலம்பூர் – சிரியாவிற்குச் செல்ல தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று முன்னாள் பட்டமேற்படிப்பு மாணவியான சித்தி நூர் ஆயிஷா ஆதம் எண்ணுவதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது.
சித்தி நூர் ஆயிஷாவின் இந்த எண்ணத்தை அறிந்த அவரது தந்தை ஆதம் ஜூஷோ கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி, காவல்துறையில் புகார் அளித்து, சிரியாவிற்குச் செல்ல விடாமல் தடுத்தார்.
சிரியாவில் நடக்கும் போரில் கலந்து கொள்ளத் தான் அங்கு போக வேண்டும் என்றும், இல்லையென்றால் தன்னைத் தானே அழித்துக் கொள்வதாகவும் அவர் எழுதியிருக்கும் குறிப்பு ஒன்றில் இருந்தும், அவரது தந்தையின் புகாரில் இருந்தும் தெளிவாகத் தெரிகின்றது என்று அரசாங்க துணை தலைமை வழக்கறிஞர் பி.குன்யலாம் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி, ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான 12 நூல்களை சித்தி நூர் ஆயிஷா வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 130ஜேபி(1)-ன் படி, சித்தி நூர் ஆயிஷா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம்.
இந்நிலையில், சித்தி நூர் ஆயிஷாவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் மொகமட் கமாருசமான் ஏ.வாஹாப் கூறுகையில், தனது கட்சிக்காரர் பல்வேறு பிரிவுகளில் நிறைய புத்தகங்களின் தொகுப்பை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், காவல்துறை குறிப்பாக ஐஎஸ் தொடர்பான புத்தகங்களை மட்டும் கைப்பற்றி அவர் மீது குற்றம் சாட்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வழக்கில் வரும் மே 2-ம் தேதி, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.