சென்னை – இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கில், டிடிவி தினகரனை, டெல்லி காவல்துறையினர் சென்னையில் இன்று விசாரணை செய்கின்றனர்.
இது குறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, துணை ஆணையர் சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று புதன்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, டெல்லியில் 1.30 கோடி ரூபாய் பணத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் டெல்லி காவல்துறை நடத்திய விசாரணையில் தேர்தல் ஆணையத்திற்கு, 60 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுப்பதற்காகத் தன்னிடம் 1.30 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து தினகரன் மீது டெல்லி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.