பெங்களூர் -ராஜமௌலி இயக்கத்தில் சத்யராஜ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பாகுபலி 2’ திரைப்படத்தை, கர்நாடகாவில் வெளியிட, அம்மாநிலத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினை தீவிரமாக இருந்த போது, தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள்.
அப்போது நடிகர் சத்யராஜ் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக, கர்நாடக அரசுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், அதனை மனதில் வைத்து, சில கன்னட அமைப்புகள், சத்யராஜைப் பழிவாங்க, ‘பாகுபலி2’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் எனப் போராட்டம் நடத்தி வருகின்றன.
காவிரி பிரச்சினையில் தான் பேசிய பேச்சுக்களுக்கு சத்யராஜ் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே திரைப்படத்தை வெளியிட அனுமதிப்போம் என்றும் அந்த அமைப்புகள் கூறி வருகின்றன.
மேலும், வரும் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், அந்நாளில் கர்நாடகாவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.