சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக, சசி அணி, பன்னீர் அணி என இரண்டாகப் பிரிந்த போது, எந்தப் பக்கம் சாய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், திடீரென ஜெயலலிதா தனக்கு பிரச்சாரத்திற்காக வழங்கிய இன்னோவா காரை கட்சியிடமே திரும்ப ஒப்படைத்து பொதுவாழ்வில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
மேலும், சசிகலா யாரென்றே தனக்குத் தெரியாது என்றும், அவருடன் பேசிப் பழகியதில்லை என்றும் அப்போது தெரிவித்தார்.
இந்த முடிவை எடுத்த அடுத்த சில தினங்களில் சசிகலாவைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதன் பிறகு அவரிடமே சரணடைந்தார்.
இந்நிலையில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போன பிறகு, டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆன நாஞ்சில் சம்பத் அவரைப் புகழ்ந்து பேசுவதையே தனது அன்றாடப் பணியாக்கிக் கொண்டார்.
இதனிடையே, நேற்று வியாழக்கிழமை சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், அதிமுக-வை வழிநடத்த தினகரன் தான் சரியான தலைவன் என்றும், சசிகலா தான் தனது தலைவி என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தை மக்கள் கேட்டால் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, “என்ன காறித் துப்புவார்களா? துப்பினால் துடைத்துக் கொள்வேன்” என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் இணைய வேண்டிய நிலை வந்தால், “நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தற்போது நாஞ்சில் பேசும் இந்தக் காணொளி நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதோடு, மக்களின் நகைப்பையும் பெற்று வருகின்றது.