கோலாலம்பூர் – நாடு முழுமையிலுமுள்ள மலேசிய இந்திய சமுதாயத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கான செயல் முன்வரைவுத் திட்டத்தை (புளூபிரிண்ட்) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் வெளியிடுகின்றார்.
இந்தக் கூட்டத்தில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உட்பட மஇகாவின் முக்கியத் தலைவர்கள் பலரும், சமுதாயத் தலைவர்களும் திரளராகக் கலந்து கொள்வர்.
இது குறித்து நேற்று சனிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நஜிப், மேலே காணும் புகைப்படத்தையும் வெளியிட்டு, இன்று தான் வழங்கப்போகும் உரையின் இறுதி வடிவத்தை டாக்டர் சுப்ராவோடு கலந்தாலோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காக இதுவரை எடுத்து வந்திருக்கும் முயற்சிகளை விவரிக்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் வரைந்துள்ள இந்த முன்வரைவுத் திட்டத்தின் அம்சங்களை நஜிப் இன்று வெளியிடுகின்றார்.