கோலாலம்பூர் – கடந்த நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ரா உலக வாணிப மையத்தில் இந்தியர்களுக்கான வியூகச் செயல் வரைவுத் திட்டத்தை (புளுபிரண்ட்) வெளியிட்டு உரையாற்றும்போது அதன் உருவாக்கத்திற்கும், செயல்வடிவத்திற்கும் முன்னின்று பாடுபட்டவர் (Prime Mover) மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் எனப் பாராட்டு தெரிவித்தார்.
இதனை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் சுப்ராவை வரைவுத் திட்ட அமுலாக்கத்திற்கான ஆட்சிக் குழுவுக்கான தலைவராகவும் பிரதமர் நியமித்திருக்கிறார்.
அரசாங்க உயர் பதவிகளில் 3 பேர் தமிழ் பேசுவார்கள் – பிரதமர் நகைச்சுவை
மேலும் தனது உரையின் போது ஒரு கட்டத்தில், “சுப்ரா தான் ஆட்சிக் குழு தலைவராக இருப்பார். எனவே அமுலாக்கம் சரியாக இல்லாவிட்டால் நீங்கள் அவரைப் பாருங்கள்” என்று நகைச்சுவையாகக் கூறிவிட்டு பின்னர் “ஆனால் நாங்கள் அனைவரும் இதன் அமுலாக்கத்திற்குத் துணையாக இருப்போம். நானும் துணைப் பிரதமர் சாஹிட்டும் புளுபிரிண்ட் திட்டத்தின் அமுலாக்கத்திற்கு உறுதுணையாக இருப்போம். அது மட்டுமல்ல அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவும் இதன் அமுலாக்கத்தில் உறுதுணையாக இருப்பார்” என்றார்.
புளுபிரிண்ட் அறிமுக விழாவில் (இடமிருந்து) டத்தோ லோகா பாலமோகன், டத்தோஸ்ரீ தேவமணி, கல்வி அமைச்சர் மஹாட்சிர், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன்…
தொடர்ந்து “அலி ஹம்சாவிடம் நீங்கள் பிரச்சனைகளைத் தமிழிலேயே கூறலாம்” எனப் பலத்த சிரிப்பொலிகளுக்கிடையே கூறினார். “இன்று நாட்டின் மூன்று உயர் அரசாங்கப் பதவிகளில் உள்ளவர்கள் நன்றாகத் தமிழ் பேசக் க கூடியவர்கள்” என்றும் நஜிப் பெருமிதத்துடன் கூறினார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா, நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, சுங்கத் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ சுப்ரமணியம் ஆகிய மூவரும் தமிழில் பேசக் கூடியவர்கள் என்பதைத்தான் நஜிப் குறிப்பிட்டார்.
சகோதரக் கட்சிகளின் ஆதரவு – மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்…
நஜிப் உரையில் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- இந்தியர்களுக்கான செயல் முன்வரைவுத் திட்டம் (புளுபிரிண்ட்) பொதுத் தேர்தலுக்காக முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் அறிவிப்பு அல்ல என்று கூறிய நஜிப், இது எனது அரசாங்கம் 2015ஆம் ஆண்டு மே மாதத்திலேயே வழங்கிய உத்தரவாதம் என்றார்.
- 11-வது மலேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் என்ற செயல் முன்வரைவுத் திட்டம் ஒன்று வரையப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தான் உறுதி வழங்கியதற்கேற்பவே இன்று இந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதாக நஜிப் கூறினார்.
புளுபிரிண்ட் அறிமுக நிகழ்ச்சியில் கல்வித் துறை துணையமைச்சர் ப.கமலநாதன்…
- ஆனால், இந்தத் திட்டத்தின் காரணமாக இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்தால், அதனைத் தான் தடுக்கப் போவதில்லை என்றும் நஜிப் நகைச்சுவையாகக் கூறினார்.
- இந்த புளுபிரிண்ட் இந்திய சமுதாயம் முழுமைக்கும் சொந்தமானது என்றும் நஜிப் கூறினார்.
- இது ஒரு சிலர் திரித்துக் கூறுவதுபோல் அரசியல் பேச்சல்ல என்று குறிப்பிட்ட நஜிப் தமிழிலேயே ‘வெட்டிப் பேச்சல்ல. இது நிஜம்’ என்று கூறினார்.
- இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அந்த சமுதாயத்திற்கே உரித்தானவை. தோட்டப் பின்புலத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் பிரச்சனைகள் வேறுமாதிரியானவை. இருந்தாலும் மாற்ற முடியாதது என்பது எதுவுமல்ல.
புளுபிரிண்ட் அறிமுக நிகழ்ச்சிக்கு முதல் நாள் தனது உரையின் இறுதி வடிவத்தை டாக்டர் சுப்ராவுடன் இணைந்து சரிபார்க்கும் நஜிப்…
- அதனால்தான் செடிக் மூலம் இந்திய சமூக அமைப்புகளுக்கு உதவிகள் வழங்குகிறோம். நானே கடந்த ஆண்டு தீபாவளியின் போது, செடிக் உதவி பெறும் கோம்பாக்கிலுள்ள ஒரு மையத்துக்கு வருகை தந்து பெண்களுக்கான கைத்திறன் தொழில் திறன்களை நேரில் கண்டேன்.
- எனவேதான், டாக்டர் சுப்ரா கோரிக்கை விடுத்தபடி B40 எனப்படும் அடித்தட்டு மக்களின் சுயதொழில் நிதி உதவிக்காக 500 மில்லியன் சுழல் நிதியை அங்கீகரிக்கிறேன்.
- இத்தகைய உதவி மூலம் ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூடாவில் ஒரு சாதாரண சிறிய கடையாக இருந்த மயூரி உணவகம் இன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 8 கடைகளோடு பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. அத்துடன் அவர்கள் குடும்பமும் கல்வியில் உயர்ந்து, ஒருவர் விமானியாகவும், மற்றொருவர் மருத்துவராகவும் பணியாற்றுகின்றனர்.
- மற்றொரு முக்கிய அறிவிப்பாக, நிபோங் திபாலிலுள்ள கைத்திறன் கல்லூரிக்கு என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை பெயரை சூட்டுவதாகவும் நஜிப் அறிவித்தார்.
-செல்லியல் தொகுப்பு