சென்னை – திடீரென ஜெயலலிதாவின் கொடநாடு மாளிகையைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் மீண்டும் ஜெயலலிதாவைச் சுற்றியும், அவரது சொத்துக்கள் குறித்தும் மர்மமான வலைப் பின்னலை உருவாக்கியிருக்கின்றன.
அவரது கொடநாடு மாளிகையிலிருந்து (மேலே படம்) சொத்து ஆவணங்கள் திருட்டு போனதாகக் கூறப்படும் சம்பவத்தில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்திலும், திருட்டு சம்பவத்திலும் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் சேலம் எடப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்தவர். எடப்பாடிதான் நடப்பு முதல்வர் பழனிசாமியின் பூர்வீகமுமாகும்.
இந்நிலையில், கனகராஜ் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28-ஆம் தேதி கார்விபத்தில் சிக்கி பலியானார். அவருடன் கூட்டாளியாகச் செயல்பட்ட சயன் என்பவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி இருப்பதோடு, புதிய மர்மத் தகவல்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.