சென்னை – தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் (படம்) முன்னாள் கார் ஓட்டுநர் இரவிச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்திருப்பது தமிழகம் எங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
சாலையில் தனியார் பேருந்து ஒன்று இரவிச்சந்திரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என அறிவித்திருக்கும் காவல் துறையினர் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் மணல் கொள்ளை தொடர்பில் காவல் துறையினர் சேகர் ரெட்டி என்ற வணிகரின் இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்தியபோது, அங்கு கிடைத்த விவரங்களைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
அங்கு கிடைத்த ஆவணங்கள், தகவல்கள் அடிப்படையில் அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.
ஜெயலலிதாவின் கொட நாடு இல்லக் காவலாளி ஒரு திருட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அந்தத் திருட்டில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தார்.
கனகராஜின் நண்பராக திருட்டு சம்பவத்தில் செயல்பட்ட சயன் என்பவரும் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது மனைவியும், குழந்தையும் அந்தக் கார் விபத்தில் உயிரிழந்து விட்டனர்.
இவ்வாறு அடுத்தடுத்து ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த நபர்கள் கார் விபத்துகளில் தொடர்ந்து மரணமடைந்து வருவது பரபரப்பையும், பல்வேறு மர்மமான ஆரூடங்களையும் எழுப்பியிருக்கின்றது.