Home Featured தமிழ் நாடு கொடநாடு கொலை: ஜெயலலிதாவின் ‘உயில்’ தான் காரணமா?

கொடநாடு கொலை: ஜெயலலிதாவின் ‘உயில்’ தான் காரணமா?

768
0
SHARE
Ad

Kodanadu Estateசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கு, அப்பங்களாவில் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயில் மற்றும் சில சொத்து ஆவணங்கள் காரணமாக இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, இரவு கொடநாடு எஸ்டேட் பங்களாவில், 3 வாகனங்களில் வந்த 11 பேர், அங்கு காவல் பணியில் இருந்த இரண்டு காவலாளிகளைத் தாக்கிவிட்டு, பங்களாவில் ஜெயலலிதா மற்றும் விகே.சசிகலாவின் அறைகளுக்குள் நுழைந்து பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் காவலாளிகளில் ஒருவரான ஓம் பகதூர் தாப்பா மரணமடைந்தார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் தாப்பா காயங்களுடன் உயிர் தப்பினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட கே.வி.சயன் என்பவரிடம், விசாரணை நடத்த காவல்துறை தேடிவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் பாலக்காடு அருகே நடந்த சாலை விபத்தில் சயன் படுகாயமடைந்தார். அவ்விபத்தில் அவரது மனைவியும் 5 வயது மகள் நீத்துவும் கொல்லப்பட்டனர்.

அதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகத் தான், இதே கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த சயனின் நண்பரான கனகராஜ் என்பவர், தமிழ்நாடு சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இந்நிலையில், சயன் படுகாயமடைந்து பேச இயலாத நிலையில் இருப்பதாகவும், ஓம் பகதூர் கொலை வழக்கில் அவரை முறையாகக் கைது செய்து விசாரணை செய்வோம் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

கொடநாடு எஸ்டேட் குறித்து நன்கு அறிந்த அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் தேயிலைத் தொழிலாளர்கள், காவல்துறையிடம் தெரிவித்திருக்கும் தகவலில், அப்பங்களாவின் அறை ஒன்றில் ஜெயலலிதாவின் உயிலும், சொத்துக்களின் ஆவணங்களும் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, ஜெயலலிதாவின் அறைக்குள் இருந்த அந்த உயில், ஆவணப் பெட்டியைக் கொள்ளையடிக்க தான் சயன் அந்தக் கும்பலை அனுப்பினாரா?, இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கு அது தான் காரணமா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

கொடநாடு எஸ்டேட்டில் வசிக்கும் இன்னும் சிலர் காவல்துறையிடம் கூறுகையில், ஆவணங்கள் அடங்கிய பெட்டி இருக்கும் இடம் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் மற்றும் இன்னும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றும், கனகராஜ் மற்றும் சயனும் பங்களாவைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே ஆட்களை அனுப்பியிருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே, கொடநாடு எஸ்டேட் கொள்ளை, காவலாளி கொலை மற்றும் சந்தேக நபர்கள் இரண்டு மாநிலங்களில் விபத்திற்குள்ளானது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இச்சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் இன்னும் வேறு எங்கோ இருப்பது உறுதியாகியிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், இவ்வழக்கு சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்றும், அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.