Home Featured நாடு மஇகாவின் புதிய 3 செனட்டர்கள் யார்?

மஇகாவின் புதிய 3 செனட்டர்கள் யார்?

875
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த சில மாதங்களில் மஇகாவின் சார்பில் பதவி வகித்து வரும் 3 நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களின் (செனட்டர்) பதவிகளின் தவணைக் காலங்கள் முடிவடைவதால், அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமனம் பெறப் போகும் புதியவர்கள் யார் என்ற ஆரூடங்கள் மஇகா வட்டாரங்களில் வலுத்து வருகின்றன.

பதவிக் காலம் முடிவடையும் மூன்று செனட்டர்கள் யார்?

மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங், முன்னாள் மஇகா மகளிர் பகுதியின் துணைத் தலைவி திருமதி சிவபாக்கியம், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், முன்னாள் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதித் தலைவருமான டத்தோ வி.சுப்ரமணியம் (பாராட் மணியம்) ஆகிய மூவர்தான் பதவித் தவணைக் காலம் நிறைவடையும் செனட்டர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

mic-3-senators retiringசெனட்டர் பதவிக் காலம் முடிவடையும் மூவர் – (இடமிருந்து) ஜஸ்பால் சிங், சிவபாக்கியம், வி.சுப்ரமணியம்

இந்த மூவருமே இரண்டு தவணைகள் செனட்டர்களாகப் பதவி வகித்து விட்டதால், மீண்டும் இவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

ஜஸ்பால் சிங்கின் பதவிக் காலம் எதிர்வரும் 1 நவம்பர் 2017-ஆம் தேதியோடு முடிவடைகின்றது.

சிவபாக்கியம் மற்றும் டத்தோ வி.சுப்ரமணியம் இருவரின் தவணைக் காலம் 24 ஆகஸ்ட் 2017-ஆம் தேதியோடு முடிவடைகின்றது.

எனவே, அடுத்தடுத்து மூன்று மஇகா செனட்டர்களின் பதவிக் காலம் முடிவடைவதால், இவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமனம் பெறப்போகும் செனட்டர்கள் யார் என்ற ஆர்வம் மஇகா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

தேசிய நிலைப் பொறுப்பாளர்களுக்கு முதல் வாய்ப்பு

mohan t -mic vpமஇகாவின் தேசிய நிலையில் பொறுப்பு வகித்து சேவைகளை வழங்கி வந்தாலும் நீண்ட காலமாக அரசுப் பதவிகளில் அமர முடியாமல் இருக்கும் சிலருக்கு இந்தப் புதிய செனட்டர் நியமனங்களில் முக்கியத்துவமும், முதல் வாய்ப்பும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மஇகா வட்டாரங்களில் நிலவுகின்றது.

அப்படிப் பார்த்தால் மூன்று உதவித் தலைவர்களில் தற்போது பதவி ஏதும் இல்லாமல் இருக்கும் மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்) மூன்று செனட்டர்களில் ஒருவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

தேசிய உதவித் தலைவர் என்ற தகுதியோடு, மிபா எனப்படும் இந்தியர் காற்பந்து சங்கத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் குறிப்பாக காற்பந்துத் துறையில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, மற்ற இனங்களுக்கிடையிலும் அதிர்வலைகளை டி.மோகன் ஏற்படுத்தி வருகின்றார்.

தேசியத் தலைவருடன் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும் கொண்டு, அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதால், டி.மோகனுக்கு புதிய செனட்டராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், செனட்டர் பதவியை ஏற்றுக் கொள்வதா அல்லது, எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா என்ற தீர்க்கமான அரசியல் முடிவை எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் டி.மோகன் இருக்கின்றார்.

கடந்த 2 பொதுத் தேர்தல்களில் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய காரணத்தால், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல், செனட்டர் பதவியைப் பெற்று அதன் மூலம் தனது சேவைகளைத் தொடரும் எண்ணத்தில் டி.மோகன் இருக்கின்றார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள்.

மகளிர் பிரிவுக்குக் கிட்டுமா?

Mohana Muniandyசெனட்டர் சிவபாக்கியம், மஇகா மகளிர் பிரிவின் சார்பாக செனட்டர் நியமனம் பெற்றார் என்பதால், அவருக்குப் பதிலாக மகளிர் பகுதியைச் சார்ந்த ஒருவருக்குத்தான் செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும் என மகளிர் பிரிவினர் தேசியத் தலைவரை வற்புறுத்தி வருவதாக மஇகா மகளிர் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பார்த்தால், மஇகா மகளிர் பகுதித் தலைவியாக இருப்பதால்,  டத்தோ மோகனா முனியாண்டிக்குத்தான் (படம்) அந்த முதல் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இவரும் நெருங்கி வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது செனட்டர் பதவியைக் கோருவதா என்ற முடிவை எடுத்தாக வேண்டும்.

அண்மையில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மோகனா முனியாண்டி போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் எழுப்பப்பட்டு, அவரும் அந்தத் தொகுதியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். எனினும், அந்த ஆரூடங்களின் ஆரவாரங்கள் தற்போது அடங்கி விட்டன.

எனவே, சிவபாக்கியத்தின் செனட்டர் பதவி, மகளிர் பகுதிக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவை தேசியத் தலைவர் எடுத்தால், அந்த வாய்ப்பு தற்போது அரசுப் பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் மோகனா முனியாண்டிக்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றாவது செனட்டர் யார்?

Vell Paariமற்றொரு செனட்டர் பதவிக்கு பல தேசிய நிலைத் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

மஇகா தேசியப் பொருளாளரும், கூட்டரசுப் பிரதேசத்தின் மஇகா கெப்போங் தொகுதியின் தலைவருமான, டத்தோஸ்ரீ வேள்பாரி (படம்), மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ ஏ.சக்திவேல், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் ஆகியோர் செனட்டராக நியமனம் பெற வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இவர்களில் சிவராஜ் மீண்டும் பொதுத் தேர்தலில், ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதனால், செனட்டர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, பொதுத் தேர்தலில் களம் காண்பதற்கு அவர் குறி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

எனவே, அடுத்த புதிய செனட்டர்களாக நியமிக்கப்படும் மூவரும் தேசிய நிலையில் முக்கியப் பொறுப்பாளர்களாகப் பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள் என்பதால், கட்சியிலும் எவ்வித சலசலப்பும், எதிர்ப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கம்போல், செனட்டராக நியமனம் பெற பலர் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திடம் நேரடியாகவும், நெருக்கமானவர்கள் மூலமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், யார் நியமனம் பெறுவார்கள் என்பது குறித்து டாக்டர் சுப்ரா யாரிடமும் இதுவரை கோடி காட்டவில்லை என்பதால், மஇகாவில் ஆரூடங்களும், எதிர்பார்ப்புகளும், தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

-இரா.முத்தரசன்