Home Featured நாடு மே 8-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவு வழக்கு

மே 8-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவு வழக்கு

622
0
SHARE
Ad

mic-ros-combo-logo.without title jpg

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மே 8-ஆம் தேதி மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

இந்த வழக்கிலிருந்து இதுவரை 5 பேர் விலகிக் கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முன்வந்திருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

எதிர்வரும் மே 8-ஆம் தேதி வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது 5 பேர் வழக்கிலிருந்து விலகிக் கொண்டுள்ளதும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

K.Ramalingam MIC Batuஏ.கே.இராமலிங்கம் (படம்), வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோ எண்மரும் இணைந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.

இவர்களில் வி.கணேஷ்,  எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை ஆகிய ஐவர் வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஞ்சிய மூவரான ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோர் தொடர்ந்து இந்த வழக்கை மேல்முறையீட்டுக்காக கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கின்றனர். இவர்களைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் டத்தோ வி.மனோகரன் வழக்காடுகின்றார்.

வழக்கின் பின்னணி

Dr.Subraகடந்த 5 பிப்ரவரி 2016-இல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன்,  டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ரசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகிய எண்மரும் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட இந்த வழக்கு, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் கடந்த 11 ஜூலை 2016-இல்  தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென தீர்ப்பு கூறியது.

Malaysia Courts

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள் அதாவது மஇகா மற்றும் சங்கப் பதிவகம் தரப்பில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு (பெடரல் கோர்ட்) மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைதான் மே 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

தீர்ப்பு என்னவாக இருக்கும்?

மே 8-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது மஇகாவையோ, கட்சித் தலைமையையோ எந்தவிதத்திலும் பாதிக்காது.

10 ஜனவரி 2017-ஆம் நாள் மேல் முறையீட்டு நீதிமன்றம் (கோர்ட் ஆப் அப்பீல்) வழங்கிய தீர்ப்பை மறு உறுதிப்படுத்துவதா அல்லது அந்தத் தீர்ப்பு மீதான மேல் முறையீட்டை விசாரிப்பதா என்ற முடிவை கூட்டரசு நீதிமன்றம் மே 8-ஆம் தேதி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MIC-logoஅவ்வாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு உறுதிப் படுத்தப்பட்டால், இந்த வழக்கு முழு விசாரணைக்காக மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

அதன் பின்னர் மீண்டும் இந்த வழக்கு, ஆரம்பக் கட்டத்திலிருந்து தொடங்கி உயர் நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் என முழுமையாக நடந்து முடிய மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே சமயத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் 10 ஜனவரி 2017 தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற முடிவை கூட்டரசு நீதிமன்றம் மே 8-இல் எடுத்தால், அந்த வழக்கின் விசாரணைக்காக மற்றொரு தேதியை நிர்ணயிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்