கோலாலம்பூர் – மலேசியர்களின் வாட்சாப் உரையாடல்கள் உளவு பார்க்கப்படுகின்றனவா? என்ற கேள்விக்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சையத் கெருவாக், இல்லை எனப் பதிலளித்திருக்கிறார்.
வாட்சாப் உரையாடல்களை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உளவு பார்ப்பதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் சாலே சையத் கூறியிருக்கிறார்.
எனினும், நாட்டின் சட்ட விதிமுறைகளை மதித்து, நட்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்தும் படி, மக்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறுவதாகவும் சாலே சையத் குறிப்பிட்டிருக்கிறார்.
“நமக்கு பேசுவதற்கும், எழுதுவதற்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் குற்றச்சாட்டுகளைச் சுமத்தவும், வதந்திகளைப் பரப்பவும் நமக்கு சுதந்திரமில்லை. அது நமது நாட்டின் மரியாதையையும், கௌரவத்தையும் அழித்துவிடும். எம்சிஎம்சி என்பது ஒரு கட்டுப்பாடான அமைப்பு. எனவே யாராவது குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளைப் பதிவு செய்தால் நிச்சயம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று சாலே சையத் இன்று வெள்ளிக்கிழமை ஆசியான் அனைத்துலக திரைப்பட விழா மற்றும் விருதுகள் 2017 விழாவைத் தொடங்கி வைத்த போது தெரிவித்தார்.