நெவார்க் – பயணி ஒருவருடன் தவறான திசையில் பறந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
நியூஜெர்சியின் நெவார்க்கிலிருந்து, பிரான்சின் பாரிஸ் செல்ல வேண்டிய பயணி லூசி பாஹெதவ்கிலேவை, தவறுதலாக சான்பிரான்சிஸ்கோவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
இதனால் சுமார் 28 மணி நேரத்திற்கும் மேலாக, விமானத்திலேயே உட்கார்ந்து வீணாக 4,800 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார் லூசியா.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, இரகசியமாக நடந்திருக்கிறது. அதில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம், “இது ஒரு மிகக் கொடூரமான தவறு” என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
நெவார்க் லிபெர்டி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் புறப்படும் விமானத்திற்காகக் காத்திருந்த போது, கடைசி நேர நுழைவு வாயில் மாற்ற அறிவிப்பைச் செய்திருக்கிறது யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிர்வாகம்.
இதனால் லூசி தவறான விமானத்தில் ஏறியிருக்கிறார். அவ்விமானத்தில் ஏறியவுடன், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை 22சி-ல் வேறு ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு விமானப் பணிப்பெண்ணிடம் விசாரித்திருக்கிறார்.
லூசியின் போர்டிங் பாஸ் என்று அழைக்கப்படும் நுழைவு அனுமதிச் சீட்டைப் பார்த்த விமானப் பணிப்பெண், அதனை முறையாக சோதனை செய்யாமல் லூசியை வேறு ஒரு இருக்கையில் அமர வைத்திருக்கிறார்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு யுனைட்டட் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
மேலும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்விமான நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, டேவிட் டாவ் என்ற பயணியை யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் நடத்திய விதம் அனைத்துலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு சம்பவமாக, உலகின் மிகப் பெரிய முயல் என்ற சாதனையைப் பெற்றிருந்த முயலை, யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கார்கோவில், லண்டனில் இருந்து சிகாகோ கொண்டு சென்ற போது, அது இறந்து காணப்பட்டது.
இப்படியாக, யுனைட்டட் ஏர்லைன்ஸ் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.