அபுஜா – கடந்த 2014-ம் ஆண்டு, நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் அமைந்திருந்த, பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில், நுழைந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், அங்கிருந்த 276 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், நைஜீரிய இராணுவம் பலக்கட்ட தேடுதல் பணிகளை மேற்கொண்ட போதும், அவர்களால் மாணவிகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் அமெரிக்க இராணுவம் அழைக்கப்பட்டு தேடுதல் பணி தொடரப்பட்டது. எனினும், மாணவிகளை மீட்க முடியாமல் திணறிய அரசுக்கு எதிராக உலகளவில் பெண்ணுரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.
இதனையடுத்து, நைஜீரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், நைஜீரிய சிறைகளில் இருக்கும் சில போக்கோ ஹராம் தீவிரவாதிகளை விடுவித்தால், மாணவிகளை விடுவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் படி, தற்போது 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தீவிரவாதிகளின் குழந்தைகளை கையில் சுமந்து கொண்டிருக்கின்றனர். மொத்தம் 276 பேரில் ஏற்கனவே 50 பேர் தப்பித்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரெட்கிராஸ் அமைப்பும், சுவிட்சர்லாந்தும் இணைந்து 21 மாணவிகளை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட மாணவிகளை நைஜீரிய அதிபர் முகமட் புகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே, இன்னும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு, ஆயிரக்கணக்கான பெண்களும் போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் பிடியில் தான் இருப்பதாக நம்பப்படுகின்றது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் போக்கோ ஹராம் அமைப்பு, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கலந்து வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு ஆட்சியைக் கொண்டு வர ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.