கோலாலம்பூர் – ஹிண்ட்ராப் இன்னொரு இந்தியர் அரசியல் கட்சியாக உருவெடுக்கின்றது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்த இயக்கம் முதலில் அரசியல் கட்சியாக பொதுத் தேர்தலுக்குள் பதிவு பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடுமையானதாக இருக்கும் எனக் கருதப்படும் 14-வது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் களம் காணவிருப்பதும், அதிலும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் இணையப் போவதாக அறிவித்திருப்பதம், மலேசிய இந்தியர் அரசியல் சூழலை மேலும் சுவாரசியமானதாகவும், பரபரப்பானதாகவும் மாற்றியமைத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
ஓர் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு பெறுவதற்கு முதலில் சங்கப் பதிவகத்திற்கு விண்ணப்பித்து அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.
எனினும், அரசியல் கட்சிக்கான விண்ணப்பதை நிராகரிக்கவோ, அல்லது அதன் அனுமதியைப் பல காரணங்கள் காட்டி தாமதப்படுத்துவதற்கோ சங்கப் பதிவகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
இந்நிலையில் அரசு சாரா இயக்கமாகப் பதிவு பெற்றிருக்கும் ஹிண்ட்ராப், அரசியல் இயக்கமாக உடனடியாக உருமாறுவதற்கு பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கக்கூடும்.
சமூக இயக்கம் அரசியல் இயக்கமாக மாற முடியுமா?
ஹிண்ட்ராப் போன்ற ஒரு சமூக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுவதற்கு சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா அல்லது புதிய அரசியல் கட்சிக்கான விண்ணப்பத்தைத் தனியாக சமர்ப்பிக்க வேண்டுமென அந்த இயக்கத்தை சங்கப் பதிவகம் கேட்டுக் கொள்ளுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
காரணம், பொதுவாக சமூக இயக்கங்கள் அரசியல் கட்சியாக உருமாற்றம் பெறுவதற்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்ற முன்னுதாரங்கள் இதற்கு முன் ஏதாவது இருக்கின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அதிலும் ஹிண்ட்ராப் போன்ற சர்ச்சைக்குரிய சமூக இயக்கங்கள் அரசியல் கட்சியாக உருமாற சங்கப் பதிவகம் அனுமதி வழங்குமா என்பதும் கேள்விக் குறிதான்!
மதங்களைக் குறிக்கும் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு இனி புதிதாக அனுமதி இல்லை என்ற ஒரு முடிவையும் சங்கப் பதிவகம் அண்மையக் காலத்தில் எடுத்துள்ளதாக அறியப்படுகின்றது.
இந்நிலையில் இந்து என்ற மதத்தின் அடையாளத்தோடு பெயர் கொண்டுள்ள ஹிண்ட்ராப்புக்கு அதே பெயரில் அரசியல் கட்சி பெயர் சூட்டப்பட அனுமதி வழங்கப்படுமா அல்லது வேறு பெயரில் அரசியல் கட்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுமா என்பதும் இதுவரை தெரியவில்லை.
தங்களின் சட்ட ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசித்து, ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறுவதில் தடையேதும் இல்லை என ஹிண்ட்ராப் பொதுச் செயலாளர்தான் அறிவித்திருக்கிறாரே தவிர, சங்கப் பதிவகம் எத்தகைய முடிவை எடுக்கப் போகின்றது என்பது இனிமேல்தான் தெரியவரும்.
முன்னாள் தலைவர்களை ஹிண்ட்ராப் ஒன்றிணைக்க முடியுமா?
மேலும் பல சவால்களும் ஹிண்ட்ராப்புக்கும் அதன் தலைவர் வேதமூர்த்திக்கும் காத்திருக்கின்றன.
ஏற்கனவே, பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று வேறு வேறு தளங்களில் ஐக்கியமாகிவிட்ட ஹிண்ட்ராப் தலைவர்களை மீண்டும் கொண்டு வந்து ஒன்றிணைக்க முடிந்தால்தான் ஹிண்ட்ராப் வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுக்க முடியுமே தவிர வேதமூர்த்தி ஒருவருக்காக ஹிண்ட்ராப் பின்னால் அரசியல் ரீதியாக இயங்க அதன் ஆதரவாளர்கள் முன்வருவார்களா என்பது சந்தேகமே!
அன்று 2007-இல், ஆலயங்கள் உடைப்பு என்ற விவகாரம், அத்துடன் இணைந்து, ஹிண்ட்ராப்பின் ஐந்து தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டது – அவர்களை சிறைக்குள் வைத்துக் கொண்டே பொதுத் தேர்தலை தேசிய முன்னணியும் அப்போதைய பிரதமர் (துன்) அப்துல்லா படாவியும் எதிர்கொண்ட விதம் –
இவற்றால்தான் தேசிய முன்னணி 2008 பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவியதே தவிர, ஹிண்ட்ராப்பில் உள்ள ஒருசிலரின் தனிப்பட்ட தலைமைத்துவ ஆற்றலால் அல்ல!
நம்பிக்கைக் கூட்டணி ஹிண்ட்ராப்பை இணைத்துக் கொள்ளுமா?
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் நான்கு கட்சிகளின் சின்னங்களைக் கொண்ட பதாகை…
ஹிண்ட்ராப் தற்போது எடுத்திருக்கும் முடிவில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணையப் போவதாக அறிவித்திருப்பது!
ஆனால், ஏற்கனவே, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் உள்ள ஜசெகவும், பிகேஆர் கட்சியும் வலுவான இந்தியர் பிரிவுகளையும், தலைவர்களையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டு இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தங்களின் முக்கியத்துவத்தை இழந்து, ஹிண்ட்ராப்பை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வருவார்களா அல்லது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் அவர்கள் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பதும் இனிமேல்தான் விடை கிடைக்கப் போகின்ற கேள்வி!
ஒரே மலேசிய இனம் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுத்துச் செல்வதாகக் கூறிக் கொள்ளும், ஜசெக, பிகேஆர் கட்சிகள், ஹிண்ட்ராப் போன்ற இந்தியர்களை மட்டுமே கொண்ட அதுவும் மதப் பின்னணியைக் கொண்ட கட்சியை இணைத்துக் கொள்ள முன்வருவார்களா?
இத்தனை சவால்களையும், கேள்விகளையும் கடந்த பின்னர்தான் –
முதலில் ஹிண்ட்ராப், அதே பெயரில் அரசியல் இயக்கமாக பதிவு பெற முடியுமா?
அப்படியே பதிவு பெற்றாலும் இந்தியர்களின் ஆதரவு பெற்ற அரசியல் இயக்கமாக ஒளிவீச முடியுமா?
பக்காத்தார் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணியில் அதனால் இணைய முடியுமா?
என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்!
-இரா.முத்தரசன்