கோலாலம்பூர் – மாநில ஆட்சிக்குழுவில் இருந்து 3 பாஸ் உறுப்பினர்களைப் பதவி விலகிக் கொள்ளும் படி, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பேசிய அஸ்மின் அலி, பாஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்சிக் குழு உறுப்பினர்களான டத்தோ இஸ்கண்டார் சமட், டத்தோ டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி மற்றும் ஜைடி அப்துல் தாயிப் ஆகிய மூவரையும் பதவி விலகிக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநிலத்தின் புதிய பாஸ் ஆணையர் சாலேஹென் முக்யியும் உடனிருந்தார்.
எனினும், இம்மூவரும் 2013 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதால் சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
அதாவது, ஆட்சிக் குழுவில் இருந்து விலகினாலும் கூட, மாநில மேம்பாட்டு ஒதுக்கீடுகள் ஆகிவற்றில் தொடர்ந்து இருப்பதோடு, கிராமப்புறக் கமிட்டிகளில் நகராட்சி கவுன்சிலர்களாகவும் அவர்கள் செயல்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.