கோலாலம்பூர் – ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், கடந்தாண்டு எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றினார்.
தனது உரையில் “கல்வியைப் பொறுத்தவரை “அப்பா” திரைப்படம் சமுதாயத்திற்கு நல்ல கருத்தினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. அந்தத் திரைப்படத்தை ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புத்ரா தலைவர் யுவராஜா, டான்ஸ்ரீ மாரிமுத்து, ப.கமலநாதன், அ.சக்திவேல், எஸ்.சோதிநாதன், சா.வேள்பாரி ஆகியோர்…
“பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வியை மிக கவனமாக கையாள வேண்டும்” எனவும் மாணவர்களிடையே உரையாற்றும்போது நினைவூட்டிய, டாக்டர் சுப்ரா நமது இந்திய மாணவர்கள் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற அவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்ட தியாகத்தையும் உழைப்பையும் நினைவு கூர்ந்தார்.
கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் உயரிய தேர்ச்சி அடைவதை மட்டுமே மாணவர்கள் தங்களின் இலட்சியமாக எப்போதும் கொண்டிருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்திய டாக்டர் சுப்ரா மாறாக, சமுதாயத்திற்குப் பயன்படும் நற்காரியங்களை ஆற்றுவதற்கும், தங்களின் மனித வள ஆற்றலை சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
அதே வேளையில் எதிர்வரும் சவால் மிக்க காலங்களில் அனைத்தையும் எதிர்த்து நின்று போராட தனிமனித சுய திறன்களையும், நற்பண்புகளையும், தடைகளைக் கடந்து செல்லக் கூடிய திறன்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மாணவர்களிடையே உரையாற்றும்போது தெரிவித்தார்.
பள்ளி அல்லது கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்து விட்டு வெளியுலகத்திற்கு வரும்போது தங்களின் பெற்றோர்கள் தங்களிடம் விதைத்த படிப்பினைகள், நற்குணங்கள், ஆகியவற்றைத் துணையாகவும், வழிகாட்டிகளாகவும் கொண்டு, தங்களின் வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 9A+ பெற்ற 37 மாணவர்களும், எஸ்.டி.பி.எம் தேர்வில் 4.0 புள்ளிகள் பெற்ற 12 மாணவர்களும் பொதுச் சேவைத் துறையின் முழு உதவியுடன் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது டாக்டர் சுப்ரா அறிவித்தார்.
கடந்தாண்டு எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் டாக்டர் சுப்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், மஇகா பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி, தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.சோதிநாதன் ஆகியோருடன், மாணவர்களின் பெற்றோர்கள், ம இ கா மற்றும் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.