கோலாலம்பூர் – பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கட்டாயப்படுத்தினால், சிலாங்கூர் அரசாங்கத்தில் இருக்கும் 13 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என பாஸ் தலைமைத்துவம் மிரட்டல் விடுத்திருக்கிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சிலாங்கூர் பாஸ் தலைவரும், சபா சட்டமன்ற உறுப்பினருமான சாலேஹென் முக்யி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மிரட்டல் உண்மையானால், சிலாங்கூர் அரசைக் கடுமையாக பாதிக்கும். காரணம், சிலாங்கூரின் 56 மாநில சட்டமன்றங்களில் பக்காத்தான் 29 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்டு விளிம்பிற்குத் தள்ளப்படும்.
அதன் பின்னர் பக்காத்தானிடம் 14 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களும், 13 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களும், 2 அமனா சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமே இருப்பார்கள். இதனால் ஒரே சட்டமன்றம் மட்டுமே பக்காத்தானிடம் கூடுதலாக இருக்கும்.
அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் ஏற்றுக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, மாநில ஆட்சிக்குழுவில் இருந்து 3 பாஸ் உறுப்பினர்களைப் பதவி விலகிக் கொள்ளும் படி, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.