Home Featured நாடு சுங்கை சிப்புட்டைக் குறி வைக்கிறதா ஜசெக? சிவநேசன் போட்டியா?

சுங்கை சிப்புட்டைக் குறி வைக்கிறதா ஜசெக? சிவநேசன் போட்டியா?

874
0
SHARE
Ad

Michael-Jeyakumar-Feature

ஈப்போ – 2008, 2013 பொதுத் தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் (படம்). பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா என்று அழைக்கப்படும் பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்.

பிஎஸ்எம் கட்சி அதிகாரபூர்வமாக பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் புதிய கூட்டணியில் இல்லாவிட்டாலும், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் பக்காத்தான் ராயாட் கூட்டணி சுங்கை சிப்புட் தொகுதியை மைக்கல் ஜெயகுமாருக்கு விட்டுக் கொடுத்தது.

#TamilSchoolmychoice

அவர் தொடர்ந்து அந்தத் தொகுதியில் மக்கள் சேவைப் பணிகளில் ஈடுபட்டு வாக்காளர்களிடையே பிரபலமாக இருந்து வரும் காரணத்தால் அவருக்கு சுங்கை சிப்புட் தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது.

சாமிவேலுவைத் தோற்கடித்த ஜெயகுமார்

sivanesan-dap-sungei siput-dinner-1905201719 மே 2017-இல் சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற இந்தியர் அமைப்புகளின் சந்திப்புக்  கூட்டத்தில் உரையாற்றும் சிவநேசன்…(படம்: நன்றி- ஏ.சிவநேசன் முகநூல் பக்கம்)

2004 பொதுத் தேர்தலில் அப்போது பலம் வாய்ந்தவராகத் திகழ்ந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவைத் துணிச்சலாக எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவினாலும், 2008-ஆம் ஆண்டில் சாமிவேலுவை மீண்டும் எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்கடித்துச் சாதனை படைத்தார் ஜெயகுமார்.

அதற்காகவும், மீண்டும் 2013-இல் அவருக்கு பக்காத்தான் ராயாட் கூட்டணி சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் விட்டுக் கொடுத்தது.

ஆனால், இந்த முறை சுங்கை சிப்புட் தொகுதியை ஜசெக குறி வைத்திருக்கின்றது. பாரம்பரியமாக, ஜசெக போட்டியிட்டு வந்த தொகுதி சுங்கை சிப்புட்.

1974-இல் முதன் முதலாக சுங்கை சிப்புட் தொகுதியில் சாமிவேலு களமிறங்கியபோது, அவரை எதிர்த்து ஜசெக சார்பில் போட்டியில் குதித்தவர் ஜசெகவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான பி.பட்டு ஆவார். பட்டுவின் மகள்தான் தற்போது பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக ஜசெக சார்பில் இருந்து வரும் கஸ்தூரி பட்டு ஆவார்.

அப்போது முதல் சுங்கை சிப்புட் தொகுதியில் தொடர்ந்து ஜசெகதான் போட்டியிட்டு வந்தது. ஆனால்  ஒவ்வொரு முறையும் மஇகா வேட்பாளரான சாமிவேலுவிடம் தோல்வியைத் தழுவியது.

தற்போது பேராக் மாநிலத்தின் சுங்கை சட்டமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் சிவநேசன் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார் என்கின்றன ஜசெக வட்டாரங்கள்!

dap-perak-sungai siput-19052017

சுங்கை சிப்புட் இந்தியர் அமைப்புகளின் சந்திப்புக் கூட்டத்தில் சிவநேசனோடு களமிறங்கிய பேராக் மாநில ஜசெக தலைவர்கள்…(படம்: நன்றி- ஏ.சிவநேசன் முகநூல் பக்கம்)

கடந்த மே 19-ஆம் தேதி சுங்கை சிப்புட் வட்டார இந்தியர் அமைப்புகளுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பேராக் மாநிலத்தின் ஜசெக இந்தியத் தலைவர்கள், தொடர்ந்து சுங்கை சிப்புட் வட்டாரத்தில் ஜசெக சார்பிலான தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள் என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கல் ஜெயகுமார் மீது அரசியல் ரீதியான தாக்குதல்களை சிவநேசன் நடத்தி வருகின்றார்.

சொத்துகளை அறிவிப்பதில் மோதிக் கொள்ளும் சிவநேசன் – ஜெயகுமார்

Sivanesan-sliderதனது சொத்து விவரங்களை ஜெயகுமார் அறிவித்திருக்கும் நிலையில், அவரது சொத்து விவரங்கள் முழுமையாக இல்லை என்றும் ஜெயகுமார் தனது தந்தையாரிடம் இருந்து பெற்ற சொத்து விவரங்களை  அறிவிக்கவில்லை என்றும் சிவநேசன் தனது முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இருப்பினும், ஜெயகுமாருக்கு ஆதரவாக பலர் முகநூல் பக்கங்களில் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் ஜெயகுமார் சொத்து விவரங்களை அறிவிக்க முன்வந்திருக்கிறாரே ஆனால், சிவநேசன் அதைச் செய்யாமல் குறை சொல்கிறாரே என்ற ரீதியிலும் ஒரு சிலர் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்குப் பதிலளித்திருக்கும் சிவநேசன் “நான் எனது சொத்துகளை அறிவிப்பது பிரச்சனையல்ல. ஆனால், ஜெயகுமார் சொத்து விவகாரங்களை அறிவிக்கும் விவகாரத்தில் நாடகமாடக் கூடாது. அவர் பணக்காரப் பெற்றோருக்குப் பிறந்தவர். வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். நானோ 10 பிள்ளைகளோடு வாழ்க்கைப் போராட்டம் நடத்திய ஏழைத் தோட்டப் பாட்டாளி பெற்றோருக்கு பிறந்தவன். ஆனால் பிறந்தது முதல் எனது சொத்துகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், ஜெயகுமாருடன் சுங்கை சிப்புட்டிலேயே பொது விவாதம் நடத்த நான் தயார்” என சவால் விட்டிருக்கின்றார்.

இந்த அண்மையக் கால சம்பவங்களைத் தொடர்ந்து சுங்கை சிப்புட் தொகுதியைக் குறிவைத்து ஜசெக தனது காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பதும், அதன் வேட்பாளராக சிவநேசனை முன்னிலைப் படுத்தத் தொடங்கியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும் எது நடந்தாலும் ஜெயகுமார் இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்காமல் இங்கேயே போட்டியிடுவார் என்பதால் சுங்கை சிப்புட் தொகுதியில் ஜசெகவும் போட்டியில் குதித்தால், மும்முனை அல்லது (பாஸ் கட்சியும் போட்டியிட்டால்) நான்கு முனை போட்டி சுங்கை சிப்புட்டில் உருவாகும் எனத் தெரிகிறது.

-இரா.முத்தரசன்