குவாயி – தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிகப் பிரபலமான வேட்டைக்காரர் தியுனிஸ் போத்தா (வயது 51) கடந்த வெள்ளிக்கிழமை, சரிந்து விழுந்த காட்டு யானை ஒன்றின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
ஜிம்பாவே நாட்டிலுள்ள ஹவாங்கே தேசியப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை, குழு ஒன்றுடன் வேட்டைக்குச் சென்றார் போத்தா. அப்போது கூட்டமாக யானைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருந்த இடத்தில் போத்தா மற்றும் அவருடன் சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டனர்.
அப்போது, பெண் யானை ஒன்று போத்தாவை நோக்கி வேகமாக ஓடி வந்து அவரை தனது துதிக்கையால் தூக்கியது. ஆனால் போத்தாவின் நண்பர் தனது துப்பாக்கியால் அதனைச் சுட்டுக் கொன்றார்.
ஆனாலும், எதிர்பாராதவிதமாக அந்த யானை போத்தாவை விடுவித்துவிட்டு அவர் மேலேயே சரிந்து விழுந்தது. இதில் உடல் நசுங்கி போத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பணக்காரர்களை வேட்டையாட குழுவாக காட்டுக்குள் அழைத்துச் செல்வதில் பிரபலமானவராக இருந்தவர் போத்தா. சிறுத்தைகள், சிங்கங்கள், யானைகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வேட்டையாடுவது தான் போத்தாவின் வேலை என்பது குறிப்பிடத்தக்கது.