ஜாகர்த்தா – நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு ஜாகர்த்தாவின் கம்போங் மலாயு என்ற பகுதியில் நிகழ்ந்த ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரம் இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம் இரவு 10.00 மணி) இரண்டு சத்தம் மிகுந்த வெடிப்புகள் கேட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
மக்கள் சந்தடி மிகுந்த ஒரு பேருந்து நிலையம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இந்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெடிப்புக்கான காரணங்களை காவல் துறையினர் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், வெடிகுண்டு வெடித்த இடத்தில் மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்ததோடு, சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கின்றனர்.
5 பேர் மரணமடைந்திருப்பதை உறுதி செய்து சேனல் நியூஸ் ஆசியா செய்தி வெளியிட்டிருக்கிறது.
மரணமடைந்தவர்களில் இருவர் தற்கொலைத் தாக்குதல்காரர்கள் என்றும் மூவர் காவல் துறை அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் 10 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். இவர்களில் காவல் துறையினரும், பொதுமக்களும் அடங்குவர்.