Home 13வது பொதுத் தேர்தல் செகாமாட் தொகுதியில் சுவா ஜூய் மெங்-டாக்டர் சுப்ரா போட்டி!

செகாமாட் தொகுதியில் சுவா ஜூய் மெங்-டாக்டர் சுப்ரா போட்டி!

662
0
SHARE
Ad

Chua-Jui-Meng-Feature

கோலாலம்பூர், மார்ச் 23 – ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க. கட்சியின்  மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அன்வார் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, பி.கே.ஆர் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜூய் மெங் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகவும், விரைவில் பதவி விலகக் கூடும் என்றும்  தற்போது தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று பி.கே.ஆர் சார்பாக மறுப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் இயக்குனர் ஸ்டீவென் சூங் கூறுகையில், “கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் போட்டியிடுவது தொடர்பான பி.கே.ஆரின் முடிவால் சுவா ஜூய் மெங் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது.
அவர் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லையே தவிர தேர்தல் பணிகளில்  முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஜோகூர் மாநில வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்பட்டாத நிலையில், சுவா தான் போட்டியிட விரும்பும் தொகுதியை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இது குறித்து பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர்களுள் ஒருவரான தியான் சுவா வெளியிட்டுள்ள கருத்தில், ” சுவா ஜூய் மெங் பதவி விலகப்போவதாக சில பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்றும், ஒருவேளை சுவா அன்வாரின் அறிவிப்பால் அதிருப்தியில் இருக்கும் பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பி.கே.ஆர் கட்சியின் மற்றுமொரு உதவித் தலைவரான என்.சுரேந்திரன் கூறுகையில், பல ஆண்டுகளாக தேசிய முன்னணி  அரசின் கோட்டையாக இருந்துவரும் ஜோகூர் மாநிலத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டுமானால், சுவா ஜூய் மெங் தொடர்ந்து பி.கே.ஆர் கட்சியுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 சுவா போட்டியிட வாய்ப்புள்ள மற்ற தொகுதிகள்
லிம் கிட் சியாங் ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானால், சுவா ஜூய் மெங் செகாமட்,பக்ரி அல்லது மூவார் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதிலும் செகாமட் தொகுதியே சுவா ஜூய் மெங்கின்  விருப்பமானத் தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
காரணம் கடந்த பொதுத் தேர்தலில் செகாமட் தொகுதியில் ஜ.செ.க வேட்பாளர் பாங் ஹோக் லியாங் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக ம.இ.கா வேட்பாளர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் களமிறங்கி 2991 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்வாரும், இம்முறை செகாமட் தொகுதியில் பி.கே.ஆர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து  ஜ.செ.க மற்றும் பி.கே.ஆர் கட்சி சார்பான முக்கிய கூட்டங்களில் பேசி வந்தார். மேலும் செகாமட் தொகுதியில் பி.கே.ஆர் வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவெடுப்பதற்கு முக்கியக் காரணம் அந்தத் தொகுதியில் 47 சதவிகிதத்திற்கும் அதிகமான சீன வாக்காளர்கள் உள்ளனர். எனவே வருகிற பொதுத் தேர்தலில் செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
 அது தவிர சுவா ஜூய் மெங் போட்டியிட ஏதுவாக விளங்கும் இன்னொரு தொகுதி பக்ரி, ஏனென்றால், சுவா பி.கே.ஆருடன் இணைவதற்கு முன் ம.சீ.ச. சார்பாக 22 ஆண்டுகள் பக்ரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை. என்வே  இம்முறை பக்ரி தொகுதியிலும் சுவா ஜூய் மெங் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்போது பக்ரி தொகுதி ஜ.செ.க கைவசம் உள்ளது.
மேலும் மலாய் வாக்குகள் அதிகமுள்ள தொகுதியான மூவாரில் எப்போதும் மலாய் வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள். ஆனால் அந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சுவா ஜூய் மெங் நன்கு பரிட்சயமானவர் என்பதால் மூவார் தொகுதியும் சுவா ஜூய் மெங் போட்டியிட  ஏதுவான தொகுதியாக கருதப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ வேட்பாளர் ரஸாலி இப்ராஹிம் 4661 வாக்குகள் வித்தியாசத்தில் பி.கே.ஆர் கட்சி வேட்பாளர் நா புதினை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஜோகூர் மாநிலத்தில் பி.கே.ஆர் வேட்பாளர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதியில் போட்டியிடவுள்ளனர் ? என்ற கேள்விகளுக்கு இன்று இரவு ஜோகூர் வரும் அன்வார் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் லிம் கிட் சியாங் ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவது பற்றி அன்வார் அறிவிக்க வந்தபோது, அந்த கூட்டத்தில் சுவா ஜூய் மெங் கலந்துகொள்ள வில்லை. இன்று இரவு நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கூட்டத்தில் சுவா கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.