சென்னை – விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
அதில் தோன்றும் கமல், நடிகனாக தான் சினிமாவில் பல வேஷங்கள் போட்டதாகவும், ஆனால் தன்னை விட அதிக வேஷம் போட்டவர்கள் மக்கள் தான் என்று கூறுகிறார்.
மேலும், “வீட்டில் ஒருமுகம், வெளியே ஒருமுகம், ஓட்டுப்போடும் போது ஒருமுகம், ஓட்டுப்போடக் காசு வாங்கும் போது ஒருமுகம், நண்பர்களிடம் ஒருமுகம், பேஸ்புக்கில் ஒருமுகம். இதுல எது உண்மையான முகம்? 14 பிரபலங்கள், 100 நாட்கள், 30 கேமராக்கள், ஒரே வீட்டில். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஐ வில் பி வாட்சிங்” என்று கமல் அக்காணொளியில் பேசுகிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் கமல், “கம்பெனி ஆரம்பித்த போது கூட பாஸ் வேஷம் போட்டது இல்லை. இந்நிகழ்ச்சியின் அடிநாதம் சொல்ல வருவது ஒத்துழைப்பு தான். 21-ம் நூற்றாண்டில் ஒத்துழைப்பு தான் மிக முக்கியம். இப்போது யுத்தத்தில் கூட எதிரிகளை மொத்தமாக அழித்துவிட முடியாது. அவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது தான் எனக்கு இதில் பிடித்த விசயம்” என்று கமல் தெரிவித்தார்.
வரும் ஜூன் 25-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.