Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தொண்டன் – எதிரிக்கும் தொண்டு செய்யும் நல்ல மனிதன்!

திரைவிமர்சனம்: தொண்டன் – எதிரிக்கும் தொண்டு செய்யும் நல்ல மனிதன்!

1296
0
SHARE
Ad

thondan1கோலாலம்பூர் – கதைப்படி ஆம்புலன்ஸ் ஓட்டும் சமுத்திரக்கனி, உயிர்களின் மதிப்பு அறிந்தவர். ரௌடி ஒருவன் எதிரிகளால் வெட்டப்பட்டு இரத்தவெள்ளத்தில் சாலையில் கிடக்க, அவனையும் உயிராய் மதித்து சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுகிறார்.

தன் தங்கை காதலிக்க மறுத்ததால், அவள் முகத்தில் ஆசிட் ஊற்றத் திட்டமிடும் விக்ராந்தையும், நல்ல வழிக்குத் திருத்தும் நல்லமனம் படைத்த சமுத்திரக்கனிக்கு, அந்த ஊரின் முக்கியப் புள்ளியான நமோ நாராயணன் மூலமாக ஒரு மிகப்பெரிய சோதனை வருகின்றது.

ஒரு தலைக்காதல் பிரச்சினையில் மந்திரி மகனான நமோ நாராணனின் தம்பி சௌந்தரபாண்டியனுக்கு தலையில் பலமாக அடிபட்டு விடுகிறது. அவனைக் காப்பாற்ற ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் அவன் இறந்துவிட, கொலைப்பழி சமுத்திரக்கனியின் மீது விழுந்துவிடுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நமோ நாராயணன் சமுத்திரக்கனியின் மீது ஆத்திரம் கொண்டு பழி வாங்கத் துடிக்கிறார்.

அதனை சமுத்திரக்கனி, அகிம்சை வழியில் எப்படி திசை திருப்புகிறார் என்பதே படத்தின் சுவாரசியம்.

நடிப்பு

Thondan5வழக்கம் போல் சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் விஷ்ணு என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு பக்கபலமாக காமெடிக் கதாப்பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்திருக்கிறார்.

ஆம்புலன்சைக் காட்டி, “இது எங்க அம்மா சார்.. இதுவரைக்கும் ஒத்த உசிரப் போகவிடல.. இரத்த வெள்ளத்தில் கிடந்தாலும்.. அடிச்சுப் புடிச்சு கொண்டு வந்து சேர்த்து உசிரக் காப்பாத்திருவேன்” என்று படத்தில் சமுத்திரக்கனிக்கு அருமையான வசனங்கள் இருப்பதோடு, அதனை மிக அழகான முகபாவனைகளோடு வெளிப்படுத்துகிறார்.

அதிலும் குறிப்பாக, ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெயரை சுமார் 5 நிமிடங்களுக்கு வரிசையாகச் சொல்லி அசரவைக்கிறார்.

கதாநாயகியாக சுனைனா.. அழுத்தமான காட்சிகள் இல்லையென்றாலும் கூட, பார்ப்பதற்கு குடும்பப் பெண்ணின் தோற்றத்தில் களையாக வந்து போகிறார்.

சமுத்திரக்கனியின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவரும், அவருக்கு ஜோடியாக விக்ராந்தின் கதாப்பாத்திரமும் ரசிக்க வைக்கின்றது.

இவர்களோடு, வேல ராமமூர்த்தி, சூரி, தம்பி இராமையா உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

திரைக்கதை, வசனம்

thondan3முதல் பாதியில் ஆம்புலன்சில் உயிரைக் காப்பாற்றுவதும், மக்களுக்குத் தொண்டு செய்வதுமாகவே மெதுவாக நகர்கிறது.

இரண்டாம் பாதியில் தான் விறுவிறுப்பு கூடுகிறது. அதிலும் நமோ நாராயணனுக்கு உதவி செய்த அந்த நான்கு போலீஸ்காரர்களைத் திசை திருப்பும் விதம் அருமை.

முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

‘எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கான்செப்டையே மறுக்கிறேன்’, ‘ஒரு மிருகம் நம்மை நோக்கி ஓடி வந்தால் அதை விட்டு விலகி நிற்கணும், இல்லையென்றால் திசை திருப்பி விடணும்’ இப்படியாக நச்சென்று மனதில் நிற்கும் வசனங்கள் ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவு, இசை

என்.கே ஏகாம்பரம், ரிச்சர்டு எம் நாதன் ஆகியோரின் ஒளிப்பதிவில் நெய்வேலியும், அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் மிக எதார்த்தமாகக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ‘போய் வரவா’ பாடல் மனதைக் கரைக்கிறது. பின்னணி இசையிலும் அசத்துகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

மொத்தத்தில், அஹிம்சை, எதிரியையும் காப்பாற்றும் நல்ல மனம், சீர்திருத்தம், பொதுநலம் என பல நல்ல கருத்துகளைச் சொல்லும் இத்திரைப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

‘தொண்டன்’ – எதிரிக்கும் தொண்டு செய்யும் நல்ல மனிதன்.

-ஃபீனிக்ஸ்தாசன்