Home Featured நாடு “தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா

“தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா

1024
0
SHARE
Ad

Dr Subramaniam

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த சில சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் “கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்காது” என மீண்டும் வலியுறுத்தியிருக்கும் அவர் “தைப்பிங் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியாத கேவியஸ் திடீரென கிளம்பி மஇகா 3 தவணைகளாக வென்று வந்திருக்கும் கேமரன் மலைத் தொகுதியைக் கேட்பது என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

kayveas“இந்த நேரத்தில் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்பியக் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்  தனது பேச்சுகளில் கண்ணியம் காக்க வேண்டும், தேசிய முன்னணியின் நடைமுறைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த கால அரசியல் வரலாறுகளையும் மறந்து விடக் கூடாது என்றும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கிறார்.

தைப்பிங்கை கேவியசுக்கு விட்டுக் கொடுத்தது கெராக்கான் கட்சிதான்

“தேசிய முன்னணியில் உறுப்பியக் கட்சியாக இருந்தாலும் பல ஆண்டுகளாக, ஒரு நாடாளுமன்றத் தொகுதிகூட இல்லாத நிலையில் இருந்துவந்த பிபிபி கட்சியை அங்கீகரித்து, தேசிய முன்னணி முதன் முறையாக 2004-ஆம் ஆண்டில் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கியது. அந்தத் தொகுதியை சக உறுப்பியக் கட்சி என்ற கௌரவத்தோடும், மரியாதையோடும் அப்போது பிபிபிக்கு விட்டுக் கொடுத்தது மற்றொரு தேசிய முன்னணி உறுப்பியக் கட்சியான கெராக்கான் கட்சிதான் என்பதையும் கேவியஸ் மறந்து விடக் கூடாது” என்றும் சுப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

gerakan-logo“அதுமட்டுமல்ல! அதற்கு முன் பல தவணைகளாக கெராக்கான் தொடர்ச்சியாக வென்று வந்திருந்த தைப்பிங் தொகுதியைத்தான் பிபிபிக்கு கெராக்கான் விட்டுக் கொடுத்தது. ஆனால் அந்தத் தொகுதியில் 2004-இல் போட்டியிட்டு வென்ற கேவியஸ் ஒரே தவணையில் – நான்கே ஆண்டுகளில் –  2008-ஆம் ஆண்டில் அந்தத் தொகுதியில் 11,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஜசெகவிடம் தைப்பிங் தொகுதியைப் பறிகொடுத்தார். அப்போது அரசியல் சுனாமி வீசியதுதான் அதன் காரணம் என்று வைத்துக் கொண்டாலும், அதே 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் மஇகா மீண்டும் வென்றது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. ஆனால், அதன் பின்னர் தைப்பிங் தொகுதியைத் தொடர்ந்து பாதுகாக்காமல் அந்தத் தொகுதியையும் கவனிக்காமல் வெளியேறிவிட்ட கேவியஸ் பின்னர் 2013 பொதுத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தொகுதி எதிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்” என தனது அறிக்கையில் சுப்ரா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“ஆனால், இப்போது அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது திடீரென இடையில் புகுந்து மூன்று தவணைகளாக மஇகா கட்டிக் காத்து, சேவையாற்றி, வெற்றி பெற்று வரும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மைபிபிபிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் தானே போட்டியிட வேண்டும் எனவும் கேவியஸ் பேசி வருவது எந்த விதத்தில் நியாயம்?” என்றும் சுப்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“ஏற்கனவே மூன்று தவணைகளாக மஇகா வென்று வரும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு நான் வென்று காட்டுவேன் அவர் கூறுவதிலும் என்ன நியாயம் என்பது புரியவில்லை” என்றும் சுப்ரா மேலும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கேவியஸ் ஒட்டுமொத்த அமைச்சரவையை கேவலப்படுத்துகின்றார்

இதற்கிடையில், அமைச்சரவையில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என்றும் ஒரே அமைச்சர் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் கேவியஸ் தனது உரையில் கடுமையாகச் சாடியிருந்தார்.

அதற்கும் பதிலளிக்கும் விதமாக “ஒட்டுமொத்த அமைச்சரவையையும் கேவியஸ் தனது பேச்சுக்களால் கேவலப்படுத்தக் கூடாது என்றும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அமைச்சரவையின் முடிவு என்பது எப்போதுமே கூட்டாக எடுக்கப்படும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் முடிவு என்பது ஏற்கனவே துணையமைச்சராக இருந்த அவருக்கும் தெரியும். இந்நிலையில் குண்டுச் சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டுகிறார் என அவர் ஓர் அமைச்சரைப் பார்த்துச் சொல்வது ஒட்டு மொத்த அமைச்சரவையையும் கேவலப்படுத்துவதாகும். காரணம், எந்த ஒரு முடிவும் ஓர் அமைச்சர் மட்டும் தன்னிச்சையாக எடுக்கும் முடிவல்ல! ஒட்டு மொத்த அமைச்சரவையின் இணக்கத்தோடுதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என தனது அறிக்கையில் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.

“ஒரே இந்திய அமைச்சராக இருந்தாலும், பிரதமரின் வழிகாட்டுதலோடும், துணைப் பிரதமர் மற்றும் மற்ற அமைச்சரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும், எஸ்ஐடிஎப் மையங்கள் திறப்பது, மக்களின் ஆவணப் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பது, தமிழ்ப் பள்ளிகள் சீரமைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக மலேசிய இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் எனப்படும் வியூகச் செயல் திட்டம் அமுலாக்கம் என பல முனைகளிலும் மலேசிய இந்திய சமுதாயத்தின் அனைத்துத் தேவைகளையும் இயன்ற வரையில் நிறைவேற்றவும், பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நானும் மஇகாவும் எங்களால் இயன்ற அளவுக்கு வெற்றிகரமாக பாடுபட்டு வருகிறோம் என்பதையும் இந்த நேரத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.